Tablighi Jamaat Row: "21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு விடுத்த மத்திய அரசே தனது ஆளுகைக்குட்பட்ட டெல்லியில்..."
ஹைலைட்ஸ்
- டெல்லியில் சென்ற மாதத் தொடக்கத்தில் தப்லீக் ஜமாத் மாநாடு நடந்தது
- இந்தியாவிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் அதில் கலந்து கொண்டனர்
- வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் அதில் கலந்து கொண்டனர்
டெல்லியில் சென்ற மாதத் தொடக்கத்தில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற பல நூறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பலரும் முஸ்லிம்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மத்தியில் ஆளும் பாஜகவின் உறுப்பினர்கள் பலர் இது குறித்து சர்ச்சையாக பேசி வருகின்றனர். அப்படிப்பட்ட கருத்துகளை கடுமையாக கண்டித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இது குறித்து சீமான், “டெல்லி மாநாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவியது எதிர்பாராதது; கெடுவாய்ப்பாக நிகழ்ந்த ஒரு விபத்து. அதற்கு மதச்சாயம் பூசி, இந்நெருக்கடிக் காலகட்டத்திலும் மதத்துவேசம் பேசி, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள முனையும் மதவாதிகளின் இழிவான அரசியல் மனிதத்தன்மையற்றது.
21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு விடுத்த மத்திய அரசே தனது ஆளுகைக்குட்பட்ட டெல்லியில் பல்லாயிரக்கணக்கில் மக்களைக் கூடவிட்டு வீதியில் நடந்தே பயணப்படவைத்து சமூக விலகலை தகர்த்ததும், அடுத்த நாளே உத்தரப் பிரதேசத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு, அம்மாநில பாஜக அரசே முன்னின்று அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியதும்தான் நாட்டைப் பிளக்கும் கொடிய மதவாத அரசியல்.
அத்தகைய பிரிவினைவாத அரசியலை இக்கட்டான இத்தருணத்திலாவது கைவிட்டு மதவுணர்வைப் புறந்தள்ளி, துளியளவாவது மனிதத்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்துகிறேன். அண்ணல் அம்பேத்கர் கூறியதை மீண்டும் சொல்கிறேன் “உங்களிடமிருக்கும் இரக்க குணத்தையும் மனிதாபிமானத்தையும் செயல்படுத்தத் தொடங்குங்கள், இருந்தால் அதைச் செயல்படுத்திக் காட்டுங்கள்” ” என்று தெரிவித்துள்ளார்.