முகக்கவசத்துடன் செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுங்கள்: விஜயகாந்த் கோரிக்கை
ஹைலைட்ஸ்
- முகக்கவசத்துடன் செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுங்கள்
- இந்த விழிப்புணர்வு புகைப்படத்தை மே.5ம் தேதி வரை டிபியாக வைக்க வேண்டும்
- அவரவர்கள் முகத்தில் முகக்கவசம் அணிந்து மொபைல் போனில் செல்ஃபி எடுங்க
கொரோனாவுக்கு எதிராக முகக்கவசம் அணிந்து செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என தமிழக மக்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச்.24ம் தேதி முதல் ஏப்ரல்.14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டது. ஆனாலும், கொரோனா நோய் தொற்று அதிகரித்ததை தொடர்ந்து வருகிற மே.3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழகத்தில் மே.3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்றார்.
இதனிடையே, தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன், சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள், கரும்பு, உர கண்ணாடி, டயர், மிகப்பெரிய காகித ஆலைகள் ஆகியவை தொடர்ந்து இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அனுமதி வழிப்பட்டுள்ளது. மேலும், பணியில் ஈடுபடுவோர் முகக்கவசம் அணிய வேண்டும், தனி மனித இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வீட்டை விட்டு வெளியே வரும் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழகத்தில் கொரோனா வைரஸ்க்கு எதிராக ஊரடங்கு அமலுக்கு வந்து ஒரு மாதம் முடிந்து மே.3ம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் மக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒட்டுமொத்த தமிழக மக்களும், தேமுதிகவை சேர்ந்த கழக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவருமே, அவரவர்கள் முகத்தில் முகக்கவசம் அணிந்து மொபைல் போனில் செல்ஃபி படம் எடுத்து டிபியாக பதிவிட்டும், அதை சமூக வலைதளங்களில் (Facebook, Twitter, whatsapp) போன்றவற்றில் பதிவிட்டு முகக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஏற்படுத்த வேண்டும் என தமிழக மக்களையும், தேமுதிக தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், இந்த விழிப்புணர்வு புகைப்படத்தை மே.5ம் தேதி வரை அவரவர்கள் மொபைலில் டிபியாக வைத்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக, சென்னை கீழ்ப்பாக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் உடலை வேறு பகுதிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. இதேபோல், கடந்த வாரம் சென்னை அம்பத்தூரில் கொரோனாவால் உயிரிழந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவரை அந்த இடத்தில் அடக்கம் செய்யக் கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.