This Article is From Jun 05, 2020

'உடல்நலனை பேணி உன்னத உயிரை காத்திடுங்கள்' - திமுகவினருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

வயதில் மூத்த உடன்பிறப்புகள், அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள், நீரிழிவு –இரத்த அழுத்தம் - சிறுநீரகப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் வீட்டிலேயே இருக்க வேண்டியது கட்டாயம். அதனை ஒருபோதும் மீறிடவேண்டாம்.

'உடல்நலனை  பேணி உன்னத உயிரை காத்திடுங்கள்' - திமுகவினருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

உடல்நலனை பேணி உன்னத  உயிரை காத்திடுங்கள் என்று திமுகவினரை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஜெ. அன்பழகன் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உடல் நலனை பேணுமாறு திமுகவினரை  அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது-

“நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

‘ஒன்றிணைவோம் வா' என்ற திட்டம் மற்றும் செயலாக்கத்தின் வாயிலாக, உங்களில் ஒருவனான நான் விடுத்த அன்பு வேண்டுகோளினை ஏற்று, தமிழக மக்களின் பசிப்பிணியாற்றியும் - அவர்களின் தேவைகளை நிறைவேற்றியும், அரசியல் - கட்சி, சாதி - மதப் பாகுபாடின்றி அனைவருக்கும் உதவியும், எதிர்க்கட்சி எனும் நிலையில் மக்களின் மனங்களில் ஆட்சி செய்து வரும் மாபெரும் இயக்கம் தி.மு.கழகம்!

நாற்பது நாட்கள் நம்முடைய கழகத்தின் மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், இயக்கத்தின் ரத்தநாளங்களாக விளங்கும் உடன்பிறப்புகள் என அனைவரும் களமிறங்கிப் பணியாற்றியதன் காரணமாக, 28 லட்சம் உணவுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு, மக்களின் பசித்துயர் போக்கப்பட்டுள்ளது. 76 லட்சம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், 51 லட்சம் முகக்கவசங்கள் – கிருமிநாசினி பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 18 லட்சம் உதவி அழைப்புகளை அலைபேசி வாயிலாகப் பெற்று, நமக்கு உதவிடும் எண்ணத்துடன் பதிவுசெய்த 36,100 நல்லோர்கள் - 230 தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நிறைவேற்றப்பட்ட மகத்தான இந்தப் பெரும்பணிக்குப் பிறகு; ஆட்சியாளர்கள் மட்டுமே தீர்வு காணக்கூடிய கோரிக்கைகள் அடங்கிய 7 லட்சம் மனுக்கள் அரசாங்கத்திடம் அளிக்கப்பட்டுள்ளன.

காணொளிக் காட்சி வாயிலாக நான் வைத்த கோரிக்கையைத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நிர்வாகிகள், பல நாட்கள் 24 மணிநேரமும் கடுமையாக உழைத்து நிறைவேற்றியபோது அவர்களை ஒவ்வொரு நாளும் தொடர்புகொண்டு, “உங்கள் உடல் நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள். கொரோனா நோய்த் தொற்று பரவாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்” என்று வலியுறுத்துவது என் வழக்கமாக அமைந்திருந்தது. அதில் நான் அதிகம் வலியுறுத்தியது, சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் அவர்களிடம்தான்.

“ஒன்றிணைவோம் வா” செயல்பாடுகளுக்காகச் சென்னையின் பல பகுதிகளுக்கு நான் நேரில் சென்று உதவிகள் வழங்கிய நிலையில், தனது மாவட்டத்திற்குட்பட்ட நிகழ்வுகளில் என்னைச் சிரமப்படுத்தக்கூடாது என்ற கவனத்துடன், தன்னையே முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர் ஜெ.அன்பழகன். “நீங்க பாதுகாப்பா இருங்க.. நான் பார்த்துக் கொள்கிறேன். விவரங்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று சொல்வது வாஞ்சை மிகுந்த அவருடைய வாடிக்கை. ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் அவர் என்பதால், அதிக அலைச்சல் கூடாது என்பதை நான் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தேன். அவரோ, பாரம்பரியமான கழக ரத்தம் உடலில் பாய்ந்தோடுகின்ற உடன்பிறப்பு.

நமது உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் நம்பிக்கைக்குரிய செயல்வீரராக விளங்கி, மிசா சிறைக்கொடுமைகளை எதிர்கொண்ட பழக்கடை ஜெயராமன் அவர்களின் புதல்வர். தந்தை எட்டடி என்றால், தனயன் பதினாறடி என்ன, அதற்கு மேலும் பாயக்கூடியவர். தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு உள்ளிட்ட அவரது மாவட்டத்தின் பகுதிகளில் நடைபெறும் எந்த விழாவாக இருந்தாலும் அதில் அவர் காட்டுகின்ற அக்கறையும், அதனைச் செயல்படுத்துகிற பாங்கும் பிரமிக்க வைக்கும். ஒய்.எம்.சி.ஏ. திடலில் அறிவாலயத்தையே அச்சு பிசகாமல் அப்படியே கொண்டு வந்து நிறுத்தியதுபோல விழா மேடை அமைப்பார். கோபாலபுரம் இல்லத் தலைவரின் வரவேற்பறையை பிறந்தநாள் மேடையின் பின்புறம் கொண்டு வந்து வைத்தது போல உருவாக்கிக் காட்டுவார். செயிண்ட் ஜார்ஜ் கோட்டையா, டெல்லி செங்கோட்டையா, நாடாளுமன்றக் கட்டடமா எதுவாக இருந்தாலும் அதை அப்படியே அழகு மிளிர உருவாக்கியதுபோல மேடை அமைத்து தலைவர் கலைஞர் அவர்களின் பாராட்டுதல்களைப் பலமுறை பெற்றவர் ஜெ.அன்பழகன்.

எதையும் மறைக்காமல் இயல்பாகப் பேசக்கூடியவர். உடன்பிறப்புக்குரிய உரிமை அந்தக் குரலில் இருக்கும். அதில் உள்ள செய்தியோ இயக்கத்தின் நலன் கருதியதாக இருக்கும். அதனால்தான் அவரிடம், இயக்கத்தின் நலன் காப்பதுபோல, நீங்கள் இயங்குவதற்கேற்ற வகையில் உடல்நலனைக் காத்திட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறேன். களத்தில் இறங்கிய போர்வீரனைப் போல, இலக்கைத் தவிர வேறெதையும் சிந்திக்காமல் செயல்பட்டார். தற்போது, கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையின் தீவிரக் கண்காணிப்பில் செயற்கை சுவாசக் கருவிகளுடன் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்.

அவருடைய உடல்நலன் குறித்து டாக்டர் இளங்குமரன் அவர்களும், கழக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் எம்.பி., அவர்களும் உடனுக்குடன் தெரிவித்து வருகின்றனர். 80 விழுக்காட்டிற்கு மேல் செயற்கை சுவாசம் தேவைப்பட்ட நிலையில், தொடர்ச்சியான மருத்துவச் சிகிச்சையினால் வெள்ளி காலையில் 45 விழுக்காடு அளவிற்குச் செயற்கை சுவாசம் என்கிற மெலிதான முன்னேற்ற நிலை ஏற்பட்டு, தொடர்ந்து சீரான நிலையில் இருப்பதை டாக்டர்கள் தெரிவித்தனர். மருத்துவர்களின் அயராத உழைப்பும் அக்கறையும் சிகிச்சை முறையும் நிச்சயமாக ஜெ.அன்பழகனை முழுமையாக நலன் பெறச் செய்து, கொரோனாவிலிருந்து மீண்டெழுந்து வந்து நம்முடன் முன்புபோல பழகிப் பேசி பணிகளைக் கவனிப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கழகத்தின் கடைக்கோடி உடன்பிறப்புவரை அதே உணர்வு வெளிப்படுவதை சமூக வலைத்தளங்கள் வாயிலாகக் காண்கிறேன்.

இதுதான் இந்த இயக்கத்தின் வலிமை; கழகத்தின் உயிர்ப்பு; ஒரே குடும்பம் என்கிற உணர்வு!

அந்தக் குடும்பத்தின் தலைமை உடன்பிறப்பு என்ற பொறுப்பில் உங்களில் ஒருவனான நான் பணியமர்த்தப்பட்டிருக்கிறேன். அந்த உரிமையுடன் உங்களுக்கு நான் வைக்கின்ற வேண்டுகோள் - அன்புக்கட்டளை ஒன்றே ஒன்றுதான். இந்த இயக்கத்தில் இருக்கின்ற ஒவ்வொரு உடன்பிறப்பின் உயிரும் முக்கியமானது. அதற்கு உடல்நலனைப் பாதுகாத்திட வேண்டும். நோய்த் தொற்று காலத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படவேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை - பரிசோதனைகளைத் தொடர்ந்து மேற்கொண்டிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.

வயதில் மூத்த உடன்பிறப்புகள், அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள், நீரிழிவு –இரத்த அழுத்தம் - சிறுநீரகப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் வீட்டிலேயே இருக்க வேண்டியது கட்டாயம். அதனை ஒருபோதும் மீறிடவேண்டாம்.

மக்களுக்கு எந்நாளும் துணையாக இருக்கும் தி.மு.கழகம் எனும் பேரியக்கத்தினைத் தாங்கி நிற்கும் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைப் பாதுகாத்திட வேண்டும்.

இருப்பது ஓர் உயிர்; அது இயக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது. அதன் மூலமாக பொதுமக்கள் நலன்களையும் உரிமைகளையும் காத்திடும் ஜனநாயகக் களத்தில் நாம் தொடர்ந்து இயங்கும் அதே நேரத்தில், உங்கள் ஒவ்வொருவரையும் நம்பியிருக்கும் உங்கள் குடும்பத்தினரின் நலனையும் மனதில் கொள்ளுங்கள். உடல் நலன் பேணுங்கள். விலை மதிப்பில்லா உன்னத உயிரைக் காத்திடுங்கள். துளியளவும் அலட்சியம் காட்டிட வேண்டாம் என அன்புக் கட்டளையிடுகிறேன்.

மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் சளைக்காத போராளியான சகோதரர் ஜெ.அன்பழகன் அவர்கள் விரைந்து நலம் பெற்று வரும் நாளினை உங்களுடன் சேர்ந்து நானும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்!”

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

.