New Delhi: கோரேகான் கலவரம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட 5 சமூக செயற்பாட்டாளர்கள் கைதுக்கு கடும் கண்டனங்கள் எழுந்ததால், இப்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 5 பேருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இருப்பதை உறுதிபடுத்தும் ஆயிரக்கணக்கான கோப்புகளும், ஆயுதங்கள் மற்றும் நிதி பெற உதவி செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் மஹாராஷ்டிர காவல் துறை தெரிவித்துள்ளது.
“எங்களிடம் நூற்றுக்கணக்கான கடிதங்கள் இருக்கின்றன. அதில், இவர்கள் மறைமுகமாக எப்படி உதவினர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் எப்படி பயன்படுத்தப்பட்டனர் என்பதெல்லாம், தெளிவாக உள்ளது” என கூடுதல் காவல் துறை இயக்குனர் பரம் பிர் சிங் தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட கடிதம் ஒன்றில் “ ராஜிவ் காந்தி சம்பவம் போல நிகழ்த்தி மோடி அரசை தூக்கி எரிவோம்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சில கடிதங்களில், கவனம் ஈர்க்கும் வகையில் பெரிதாக ஒரு சம்பவம் நடத்தலாம் என்று எழுதப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ராக்கெட் லாஞ்சர் குறித்து விளக்கும் பேப்பர் ஒன்றையும் கண்டுபிடித்ததாக அவர் தெரிவித்தார்.” மாவோயிஸ்டு தலைவர் பிரகாஷுக்கு, டெல்லியைச் சேர்ந்த ரோனா வில்சன் என்ற செயற்பாட்டாளர் ,2017 ஜூலை 30 அன்று எழுதிய கடிதத்தில்,"8 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரனேட் லாஞ்சர்களும், 4 லட்சம் புல்லட்களும் தேவை இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
சமூக செயற்பாட்டாளர்கள் வரவரா ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், அருண் ஃபெரெய்ரா, கெளதம் நாவலகா மற்றும் வெர்னான் கான்ஸ்லேவ்ஸ் ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 2017 டிசமபர் 31-ம் தேதி நடைபெற்ற கோரேகான் கலவரத்தில் தொடர்பு இருப்பதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்வதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக, அந்த செயற்பாட்டாளர்கள், கண்காணிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு எதிரான புதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.