This Article is From May 16, 2020

புதிய விதிமுறைகளுடன் இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு!

TASMAC: "பெருநகர சென்னை காவல் துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபாகன் கடைகள் திறக்கப்பட மாட்டாது"

புதிய விதிமுறைகளுடன் இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு!

TASMAC: மால்கள், வணிக வளாகங்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் இக்கடைகள் இயங்காது

ஹைலைட்ஸ்

  • கொரோனா ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன
  • மே 7 ஆம் தேதி கடைகளை டாஸ்மாக் கடைகளை திறந்தது தமிழக அரசு
  • உயர் நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி உத்தரவிட்டது

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட போது, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டன. ஆனால், மூன்றாவது முறையாக ஊரடங்கை இந்திய அரசு அமல் செய்தபோது, மாநில அரசுகள் கொரோனா தொற்று அதிகம் இல்லாத இடங்களில் மதுபானக் கடைகளை திறந்து கொள்ளலாம் என்று கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இதைத் தொடர்ந்து கடந்த மே 7 ஆம் தேதி தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. 

இதை எதிர்த்து நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. மனுவில், “டாஸ்மாக் திறப்பதற்கு அரசு விதித்த சமூக விலகல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது,” என்று குறிப்பிட்டு வாதிட்டது மய்யம் தரப்பு. இதை ஏற்ற நீதிமன்றம், “ஊடரங்கு காலம் முடியும் வரை டாஸ்மாக் கடைகள் திறக்கக் கூடாது. ஆன்லைன் மூலம் மட்டும் விற்பனை செய்து கொள்ளலாம்,” என்று உத்தரவிட்டது. 

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை ஆணையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு, இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. இது தொடர்பாக, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக், “உயர் நீதிமன்ற ஆணையைத் தொடர்ந்து, மதுபானக் கடைகள் நாளை (16.5.20) முதல் திறக்கப்படும். பெருநகர சென்னை காவல் துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபாகன் கடைகள் திறக்கப்பட மாட்டாது. மேலும், மால்கள், வணிக வளாகங்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் இக்கடைகள் இயங்காது. மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். கடைக்கு வரும் அனைவரும் முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்,” என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 

.