தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று பிரச்னை வெடித்ததை தொடர்ந்து தியாகராய நகரில் உள்ள சங்க அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்திருக்கின்றனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் இருந்துவருகிறார்.அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து அவர் மீது அடுக்கடுக்கான பல புகார்களை எதிர் அணியினர் தெரிவித்து வருகின்றனர்.
அதில் டி.சிவா, ஜே.கே.ரித்திஷ், ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் தியாகாரஜ நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டிட்டனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இன்று காலை 11 மணியளவில் விஷால், தனது ஆதரவாளர்களுடன் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குச் செனறு தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு எதிர் தரப்பினர் போட்டிருந்தப் பூட்டை விஷால் உடைக்க முயன்றார்.
அதற்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து விஷாலைத் தடுத்துநிறுத்தினர். அப்போது, விஷாலுக்கும் காவல்துறையினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதனையடுத்து, விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்களான மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்களை காவல்துறை கைது செய்தனர். மன்சூர் அலிகானை மட்டும் இழுத்துத் தள்ளி வலுக்கட்டாயமாக கைது செய்து தனி வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
பின்னர் மாலையில் விஷால் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தியாகராய நகரில் செயல்பட்டு வரும் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
இருதரப்பும் சமாதானம் ஆகி ஒரு முடிவுக்கு வந்த பின்னர்தான் தயாரிப்பாளர் சங்க கட்டிடம் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் தயாரிப்பாளர் சங்க விவகாரம் இன்னும் சில நாட்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.