இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிலைநிறுத்தும் நோக்கில் அந்த கும்பல் செயல்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
Chennai: தேசிய அளவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக நிதி திரட்டி, திட்டம் தீட்டி வந்த தீவிரவாத அமைப்பு ஒன்று சிக்கியுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிலைநிறுத்தும் நோக்கில் அந்த கும்பல் செயல்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை மற்றும் நாகையில் தீவிர தேடுதல் வேட்டையில் என்.ஐ.ஏ ஈடுபட்டு வந்தது. இதைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்டுள்ள இரு மாவட்டங்களில் இன்று சந்தேகத்திற்குரிய மூவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பபட்டுள்ளது.
“அன்சருல்லா தீவிரவாத குழு”-வை உருவாக்கி, குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர்கள், இந்திய அரசு மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்ததாக என்.ஐ.ஏ செய்திக் குறிப்பு வெளியிட்டு தகவல் தெரிவிக்கிறது.
அதில் மேலும், “எங்களுக்குக் கிடைத்த தகவல்கள்படி, குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள், பெரும் அளவிலான நிதியைப் பெற்று, இந்தியா மீது தாக்குதல் நடத்த தயாராகி வந்துள்ளனர். இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கத்தான் அவர்கள் முயற்சி மேற்கொண்டிருந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த ஜூலை 9 ஆம் தேதி, மூவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த சயீத் புகாரி (குற்றம் சுமத்தப்பட்டவர் 1), ஹாசன் அலி யூனஸ்மாரிக்கர் (குற்றம் சுமத்தப்பட்டவர் 2) மற்றும் முகமது யூசஃபுதீன் ஹரிஷ் முகமது (குற்றம் சுமத்தப்பவர் 3) ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மற்ற இருவர் நாகையைச் சேர்ந்தவர்கள்.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் வீட்டில் சோதனை செய்த என்.ஐ.ஏ அமைப்பு, 9 மொபைல் போன்கள், 15 சிம் கார்டுகள், 7 மெமரி கார்டுகள், 3 லேப்டாப்கள், 5 ஹார்டு டிஸ்குகள், 6 பென் டிரைவ்கள், 2 டேப்லட்கள், 3 சிடி/டிவிடி-க்கள், ஆவணங்கள், இதழ்கள், பதாகைகள், நோட்டிஸ், போஸ்டர்கள், புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போது குற்றம் சுமத்தப்பட்ட மூவரிடமும் என்.ஐ.ஏ விசாரணை செய்து வருகிறது.