உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை.
ஹைலைட்ஸ்
- கொரோனா அறிகுறியற்ற, லேசான அறிகுறி உடையவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை
- 100 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்பட்டோர் குணம் அடைந்து வருவதாக தகவல்
- அதிகம் பாதிக்கப்பட்டோருக்கு அலோபதி முறையில் சிகிச்சை
Chennai: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், அறிகுறிகள் இல்லாத அல்லது லேசான அறிகுறி கொண்ட கொரோனா பாதித்தவர்களை 100 சதவீதம் மீட்க முடியும் என்று அரசின் சித்த மருத்துவ துறை தெரிவித்துள்ளது.
நேற்று யோகா ஆசிரியர் ராம்தேவ், தனது பதஞ்சலி நிறுவனத்தின் சார்பாக கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், அந்த மருந்துகளை பயன்படுத்தும்போது 7 நாட்களில் பாதிக்கப்பட்டவர்கள் குணம் அடைந்து விடுவதாகவும் கூறினார். இதனை ஆய்வு செய்த மத்திய அரசு, கொரோனாவை குணப்படுத்தும் மருந்து என்று விளம்பரம் ஏதும் செய்யக்கூடாதென ராம்தேவுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழலில் தமிழகத்தில் அரசு சித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 பேர் குணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அம்பேத்கர் சித்த மருத்துவமனை வியாசர்பாடியில் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சி கழக அமைச்சர் கே. பாண்டியராஜன் என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில், ‘கொரோனா பாதிப்பிலிருந்து 100 சதவீதம்பேர் சித்த மருத்துவத்தால் குணம் பெற்றுள்ளனர். சித்த மருத்துவம் நமக்கு துருப்பு சீட்டை போன்றது. சித்த மருத்துவம் மிகவும் பலன் தரக்கூடியது என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. மக்கள் அதன் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
சித்த மருத்துவத்தில் ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் போன்றவை இருக்காது. இந்த உதவிகள் தேவைப்படுவோர் அலோபதி மருத்துவத்தை நாடலாம். வென்டிலேட்டர், ஆக்ஸிஜன் உதவி தேவைப்படுவோர் 3 சதவீதம் மட்டுமே உள்ளனர்' என்று தெரிவித்தார்.
கொரோனா அறிகுறிகள் குறைவாக அல்லது அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு மட்டுமே சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதாகவும், இதனால் அவர்கள் குணம் பெறுவதாகவும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கபசுர குடிநீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுத்துமாறு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.
இதற்கிடையே பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டிருக்கும் கொரோனா தடுப்பு மருந்தில் என்னென்ன உள்ளன, அவை ஆய்வு செய்யப்பட்டதா, பரிசோதனை முடிவுகள் என்ன, யார் ஒப்புதல் அளித்துள்ளார்கள் என்பது உள்ளிட்ட கேள்விகளை மத்திய ஆயுஷ் அமைச்சகம் கேட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை.