கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி முதன்முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டது.
Chennai: தமிழகத்தில் வரும் அக்.21ஆம் தேதி 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக, திமுக இடையே நடக்கும் இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் பங்கெடுக்க விருப்பமில்லாததால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் வரும் அக்.21ம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 21ம் தேதி அறிவித்தது. இதைத்தொடர்ந்து, இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும், இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆளுங்கட்சியான அதிமுக, 2 தொகுதிகளிலும் நிற்பது உறுதியாகியுள்ளது. நாங்குநேரி தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது என்றும், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடுவது என்றும் திமுக கூட்டணியில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்குநேரியிலும், விக்கிரவாண்டியிலும் தங்கள் தலைவர்களைகளையும், அவர்களது தலைப்பாகைகளையும் தக்கவைத்துக்கொள்வதற்காக ஆட்சியில் இருந்தவர்களும், ஆட்சியில் இருப்பவர்களும் போட்டியிடுகின்றனர்.
இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் தனக்கு பங்கெடுக்க விருப்பமில்லாததால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. பழைய கொள்ளையர் கட்சிகளையும், அதன் கூட்டுப் பங்காளிகளையும், ஆட்சியில் இருந்து அகற்றி 2021-ல் ஆட்சியை கைப்பற்றும் முனைப்போடு மக்கள் நீதி மய்யம் செயல்பட்டு வருகிறது. பெருவாரி மக்களின் எண்ணப்படி மக்களாட்சிக்கு மக்கள் நீதி மய்யம் வழி வகுத்து வருகிறது.
ஏற்கனவே இந்த இடைத்தேர்தலில் போட்டியிடபோவதில்லை என டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அறிவித்திருந்த நிலையில், தற்போது மக்கள் நீதி மய்யமும் போட்டியிடபோவதில்லை என்று அறிவித்துள்ளது.