தமிழகத்துக்கு அன்னிய முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது, கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப் பட்டது.
அந்த மாநாட்டில், ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து, 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, அடுத்தாண்டு ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் நடத்த முடிவெடுக்கப்பட்டு, முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
ஏற்கனவே இதற்கு முன்பு நடத்தப்பட்ட 2 அமைச்சரவைக் கூட்டங்களிலும், உலக முதலீட்டாளர் மாநாடு மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், வருகின்ற ஜனவரி 18ம் தேதியன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கை, உலக முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.