கடந்த 1-ம்தேதி இந்திய கப்பலான ஜலஷ்வா 687 இந்தியர்களை ஈரானில் இருந்து மீட்டு தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தது.
Chennai: ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்கக் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக கடந்த மே மாதம் 19ம் தேதி தமிழக முதல்வர் தரப்பிலிருந்து மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்திலும் மீனவர்களை மீட்டுத் தருமாறு முதல்வர் எடப்படி பழனிசாமி கோரிக்கை வைத்திருந்ததார்.
நேற்று தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது-
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ஜலஷ்வா மூலமாக கடந்த 1-ம்தேதி தமிழக மீனவர்கள் 681 பேர் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் 40 தமிழக மீனவர்கள் கப்பலில் போதிய இடம் இல்லாத காரணத்தால் அவர்கள் தமிழகத்திற்கு திரும்பவில்லை. அவர்களையும் மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். 40 தமிழக மீனவர்களை சிறப்பு விமானம் மூலம் தமிழகம் அழைத்துவர ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை வைக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய அரசின் சமுத்திர சேது திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் கொரோனா பொது முடக்கத்தால் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் கப்பல் மூலமாக மீட்டு கொண்டு வரப்படுகின்றனர்.
கடந்த 1-ம்தேதி இந்திய கப்பலான ஜலஷ்வா 687 இந்தியர்களை ஈரானில் இருந்து மீட்டு தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தது.