. கொலைக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை போலீஸ் கைப்பற்றியுள்ளது.
Chennai: திண்டுக்கல் மாவட்ட கொடைக்கானலில் இருக்கும் பள்ளி ஒன்றில், தன்னுடன் படித்த சக மாணவரால் 10 ஆம் வகுப்புப் படித்து வந்த மாணவன், கத்தரியால் குத்தி கொல்லப்பட்டு இருக்கிறான் என்று போலீஸ் தகவல் தெரிவிக்கிறது.
16 வயதாகும் கபில் ராகவேந்திரா என்னும் அந்த மாணவன், பாரதிய வித்யா பவன் காந்தி வித்யாசரத்தில் படித்து வந்துள்ளான். கடந்த திங்கட்கிழமை இரவு உணவுக்குப் பிறகு, பள்ளி விடுதியில் ராகவேந்திரா தாக்கப்பட்டுள்ளான் என்று தெரிவிக்கப்படுகிறது. ராகவேந்திராவை, சக மாணவர் ஒருவர் கத்தரி கொண்டு குத்தியுள்ளான். தொடர்ந்து கிரிக்கெட் ஸ்டம்ப் கொண்டு ராகவேந்திரா தாக்கப்பட்டுள்ளான் எனப்படுகிறது. ‘மிகவும் சிறுபிள்ளைத்தனமான' விஷயத்துக்காக ராகவேந்திரா கொலை செய்யப்பட்டுள்ளான் என்று போலீஸ் தரப்பு கூறுகிறது.
கபில் ராகவேந்திரா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஓசூரில் இருக்கும் அவனது குடும்பம் கொடைக்கானல் வந்துள்ளது.
ராகவேந்திராவைக் கொன்றது அவனது வகுப்பில் படிக்கும் சக மாணவன் ஸ்ரீ ஹரிஷ் என்று தெரியவந்துள்ளது. ஹரிஷின் சொந்த ஊர் விருதுநகர். கொலைக் குற்றத்துக்காக ஹரிஷ் கைது செய்யப்பட்டு சேலத்தில் இருக்கும் சிறுவர்கள் நல காப்பகத்துக்கு மாற்றப்பட்டுள்ளான். கொலைக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை போலீஸ் கைப்பற்றியுள்ளது. ராகவேந்திராவின் பிரேதப் பரிசோதனைக்காக போலீஸ் தரப்பு காத்திருக்கிறது.
காவலர்களின் விசாரணையைத் தவிர்த்து, மாவட்ட கல்வி ஆய்வாளரும் பள்ளிக்கு வந்துள்ளார். அவரும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்.
கொலை சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 16 வயது ஹரிஷ், இதற்கு முன்னர் இரண்டு முறை, பள்ளி சார்பில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். கடந்த மாதம் கூட அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு மாணவர்களுக்கும் இடையில் பகை இருந்ததே இந்த கொலை சம்பவத்துக்குக் காரணமாக பார்க்கப்படுகிறது.