தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழக அனல் மின் நிலையங்களில் நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதால், ஒரு நாளைக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி கொடுக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘தற்போது தமிழக அரசின் கீழ் இயங்கும் அனல் மின் நிலையங்களின் நிலக்கரித் தேவையைப் பூர்த்தி செய்ய 3 நாட்களுக்கான இருப்பு மட்டுமே கைவசம் இருக்கின்றது.
ஒரு நாளைக்கு தமிழக அனல் மின் நிலையங்களின் இயக்கத்துக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரித் தேவைப்படுகிறது. இதில் பாதி கூட மத்திய அரசால், தமிழகத்து வழங்கப்படுவதில்லை. காற்று மின் ஆலை உற்பத்தியும் செப்டம்பரின் பாதியுடன் முடிவடையும்.
எனவே, உடனடியாக தேவையான நிலக்கரி கொடுக்கப்படவில்லை என்றால் எங்களின் சில அனல் மின் நிலையங்களை மூட வேண்டியிருக்கும். உடனடியாக நிலக்கரித் துறை அமைச்சகத்திடமும் ரயில்வே துறையிடமும் நீங்கள் இந்த விஷயத்தைத் தெரிவித்து, 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி சப்ளையை தமிழகத்துக்கு உறுதி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)