போலீஸிடம் நியாயம் கிடைக்காததால் ஆட்சியர் அலுவலக்கத்தை அணுகியுள்ளார் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய்
ஹைலைட்ஸ்
- கோயம்பத்தூர், வால்பாறையில் இந்த சம்பவம் நடந்துள்ளது
- மார்ச் மாதத்திலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கேட்டு வருகின்றனர்
- ஆட்சியர் அலுவலகத்தில் தற்போது புகார் கொடுத்துள்ளனர்
Coimbatore: கோயம்புத்தூரில் மாற்றுத் திறனாளி பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் காவல் துறை அவரின் புகாரை ஏற்க மறுத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் வால்பாறையில் பாதிக்கப்பட்ட தாயும் மகளும் காஜமுடி டீ எஸ்டேட்டில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். மகள், ஒரு மாற்றுத் திறனாளி பெண். அவரை இந்த ஆண்டு மார்ச் மாதம் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆண் மீது வால்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் அந்த தாய். ஆனால், அவரின் புகாரை ஏற்க மறுத்துள்ளனர் காவல் துறையினர். மேலும், `கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுவிடுங்கள். இல்லையென்றால், டீ எஸ்டேட்டில் இருந்து வெளியேறுங்கள்' என்று மிரட்டல் விடுத்துள்ளது போலீஸ்.
இதையடுத்து காஜமுடி டீ எஸ்டேட்டின் மேலாளர் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், `போலீஸிடம் புகார் கொடுத்த மனுவை உடனடியாக திரும்ப பெற்றுவிடுங்கள். டீ எஸ்டேட்டில் நீங்கள் தங்கியுள்ள அறையையும் சீக்கிரமே காலி செய்து விடுங்கள்' என்று நெருக்கடி கொடுத்துள்ளார்.
உள்ளூர் காவல் நிலையத்தில் நியாயம் கிடைக்காததால், கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகத்தை அணுகியுள்ளார் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய். இந்த நடவடிக்கைக்குப் பின்னர் தான், இந்த விஷயம் குறித்து வெளியே தெரிய வந்துள்ளது.
(With Inputs From ANI)