This Article is From Oct 06, 2018

‘தினகரனை சந்தித்தது உண்மை தான்..!’- ஓ.பி.எஸ் ஒப்புதல்

தினகரன் - ஓ.பி.எஸ் விவகாரம், அதிமுக வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

‘தினகரனை சந்தித்தது உண்மை தான்..!’- ஓ.பி.எஸ் ஒப்புதல்

கடந்த ஆண்டு ஜூலையில் கட்சியிடம் எதுவும் சொல்லாமல், தினகரனை சந்தித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்

Chennai:

‘கடந்த ஆண்டு, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை கவிழ்க்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்’ என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் ஒரு பகீர் குற்றச்சாட்டைத் தெரிவித்தார். இதை தினகரனும் ஆமோதித்து பேட்டி அளித்துள்ளார். இது குறித்து தமிழகத்தின் துணை முதல்வர், பன்னீர்செல்வம் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

தொலைக்காட்சி சேனல் ஒன்றின் நேர்காணலின் போது தங்க தமிழ்ச்செல்வன், ‘2017 ஜூலை, ஓ.பி.எஸ், தினகரனை ஒரு பில்டர் வீட்டில் சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியை பதவியிலிருந்து நீக்க உதவி செய்ய வேண்டும் என்று தினகரனிடம், பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். கடந்த வாரம் கூட அந்த பில்டரிடம், ‘தினகரனுடன் மீண்டும் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கேட்டுள்ளார். திரைக்குப் பின்னால் அவர் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார். ஆனால், கட்சி மேடைகளில் அவர் எங்களைத் தாக்கிப் பேசுகிறார்’ என்று அதிர்ச்சியளிக்கும் தகவலைத் தெரிவித்தார்.

தங்கதமிழ்ச்செல்வனின் இந்தப் பேட்டி, அதிமுக வட்டாரத்திலும் எடப்பாடி பழனிசாமி இடத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலா குடும்பத்துக்கு ஆரம்பம் முதலே தமிழகத்தின் துணை முதல்வராக இருக்கும் ஓ.பி.எஸ், நெருக்கமாக இருந்தாலும், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அனைத்தும் மாறியது. சசிகலாவுக்கு எதிராக பத்திரிகையாளர்களிடம் புகார் கூறிய அவர், ‘தர்ம யுத்தத்தையும்’ ஆரம்பித்தார். இதையடுத்து, அவர் தலைமையில் அதிமுக-வின், தனி அணி ஒன்று உருவானது. அப்போது எடப்பாடி பழனிசாமி, சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தார். அவரும் சில நாட்களில் சசிகலாவுக்கு எதிராக காய் நகர்த்தி, தனியாக பிரிந்து சென்றார். இதையடுத்து ஓ.பி.எஸ்-ஸும், ஈ.பி.எஸ்-ஸும் ஒன்றாக சேர்ந்தனர்.

சசிகலா தலைமையிலான அதிமுக அணி, தனித்து விடப்பட்டது. பன்னீர் செல்வம், எடப்பாடி அணியுடன் சேரும் போது, ‘சசிகலா, கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்ற கோரிக்கைகளை முன் வைத்தார். இதையடுத்து அவருக்கு கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியும், ஆட்சியில் துணை முதல்வர் பதவியும் தரப்பட்டது. ஆனால், கட்சியுலும் ஆட்சியிலும் ஓ.பி.எஸ் தொடர்ந்து ஓரங்கப்பட்டப்பட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று சந்திப்பு விவகாரம் குறித்து பேசிய தினகரன், ‘கடந்த ஆண்டு ஜூலையில் ஓ.பி.எஸ் என்னை சந்தித்தார். அப்போது எங்கள் குடும்பத்துக்கு எதிராக அவர் நடந்து கொண்டதற்கு வருத்தம் தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை கவிழ்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். எங்களுடன் அவர் கை கோக்கவும் நினைக்கிறார். அதே நேரத்தில் கட்சிக் கூட்டங்களில் எங்களைத் தாக்கியும் பேசுகிறார். அவர் முதல்வராகத்தான் இவ்வளவும் வேலைகளையும் செய்கிறார்’ என்று கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம், ‘நான் தினகரனை கடந்த ஆண்டு சந்தித்தது உண்மை தான். கட்சியைக் காக்க வேண்டும் என்ற நோக்கில் தான் நான் அவரை சந்தித்தேன். ஆனால், அவரோ முதல்வராவதில் தான் குறியாக இருந்தார். இவ்வளவு தரைக்குறைவாக அவர் நடந்து கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

முதல்வராக வேண்டும் என்ற காரணத்திற்காக, நான் கீழ்த்தரமான செயலில் ஈடுபட மாட்டேன். நான் கடந்த வாரம் அவரைப் பார்க்க முயற்சி செய்யவில்லை. நான் தான் தமிழகத்தின் துணை முதல்வர். நான் எப்படி அரசை கவிழ்க்க முயல்வேன்?’ என்று பதில் கருத்து கூறியுள்ளார்.

தினகரன் - ஓ.பி.எஸ் விவகாரம், அதிமுக வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் இந்த விஷயம் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.