This Article is From Nov 02, 2019

''போராட்டம் வாபஸ் பெற்றது பின்னடைவு அல்ல'' - மருத்துவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கருத்து!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.

''போராட்டம் வாபஸ் பெற்றது பின்னடைவு அல்ல'' - மருத்துவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கருத்து!!

மருத்துவர்கள் மீதான பணி முறிவு உத்தரவு நேற்று ரத்து செய்யப்பட்டது.

Chennai:

மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது என்பது பின்னடைவு அல்ல என்றும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்றும் போராட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

காலமுறை ஊதிய உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்துதல் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் 8 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுடன் முதல்கட்டமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமைக்குள் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், வெள்ளிக்கிழமை காலை பணிக்கு வராதவர்கள் மீது பணி முறிவு Break in Service நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்திருந்தார்.

இதன்பின்னர் அறிக்கை வெளியிட்டிருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் மருத்துவர்களை கடவுளாக பார்ப்பதாகவும், மருத்துவர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அளித்தார். இதனை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், போராட்டத்தை ஒருங்கிணைத்த அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை கைவிட்டோம். மக்களை இக்கட்டான நிலைக்கு கொண்டு செல்லக்கூடாது என்பதுதான் எங்களது நோக்கம். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிடும் என்று எதிர்பார்த்தோம். இப்போது அரசு மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். விரைவில் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவாரர்கள் என்று எதிர்பார்க்கிறோம். போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை பின்னடைவாக கருத முடியாது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவிய சூழலில் மருத்துவர்கள் போராட்டம் தொடங்கியதால் சற்று பாதிப்பான நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் 2 ஆயிரம் அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 6 லட்சம் புற நோயாளிகளும், சுமார் ஒன்றரை  லட்சம் நோயாளிகள் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஊதிய உயர்வுகளை தவிர்த்து மருத்துவ மேல் படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதும் மருத்துவர்களின் கோரிக்கையாக உள்ளது. மத்திய அரசில் பணிபுரியும் மருத்துவர்கள் 12 ஆண்டுகளுக்கு பின்னர் ஒன்றரை லட்ச ரூபாய் வரையில் ஊதியம் பெறுவதாகவும், ஆனால் மாநில அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் 12 ஆண்டுகளுக்கு பின்னரும் ரூ. 80 ஆயிரம் வரை மட்டுமே பெறுவதாகவும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தெரிவித்தனர். 
 

.