நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்காக கடந்த மாதம் முதல் நடந்த வந்த மக்களவை தேர்தல், கடந்த 19ம் தேதியுடன் இறுதிபெற்றது. இதில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், வேலூர் தொகுதியில் மட்டும் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட காரணத்தால், அங்கு தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கும், 38 மக்களவை தொகுதிகளுக்குமான தேர்தல் கடந்த ஏப்.18ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, மீதமுள்ள 4 சட்டமன்ற தொகுதிக்கும் 7வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் நடைபெற்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
எனினும், வேலூர் மக்களவைத் தொகுதியில் எப்போது தேர்தல் நடைபெறும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. தொடர்ந்து, ஏழு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை எண்ணப்பட்டு அதற்கான முடிவுகள் நாளையே தினமே அறிவிக்கப்படவுள்ளன.
இதனிடையே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை தேசிய ஊடகங்கள் வெளியிட்டன. இதில் பாஜக கூட்டணி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 302 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 122 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, 20 ஆண்டு பொது வாழ்க்கைக்கு அங்கிகாரம் தரவேண்டும் என்ற வேண்டுகோளுடன் தூத்துக்குடி மக்களிடம் வாக்குகள் கேட்டேன்.
அதனால், எனக்கு எந்த எதிர்மறையும் கிடையாது. நான் எந்த ஊழல் வழக்கிலும் சிறை தண்டனை பெற்றது கிடையாது. ஒரு நேர்மையான அரசியல்வாதியாக இருந்து வந்ததால், மக்கள் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள், நிச்சயம் நான் வெற்றி பெறுவேன்.
தமிழகம் இரண்டு பெரும் ஆளுமைகள் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல், 3 புதிய முகங்கள் கமல்ஹாசன், டிடிவி தினகரன், சீமான் இவர்கள் எல்லாம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.
மக்கள் வெளியே வந்து இவர்களுக்கு தான் வாக்களித்தேன் என்று வெளிப்படையாக கூறுவார்களா என்று தெரியவில்லை. நிச்சயமாக அதிமுக - பாஜகவிற்கு ஆதரவு தந்திருப்பார்கள். மீண்டும் மோடி வரவேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக உள்ளது என்று அவர் கூறினார்.