நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு புதுச்சேரியையும் சேர்த்து 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில், மதிமுகவுக்கு 1 (மக்களவை தொகுதியும்), ஒரு மாநிலளங்களையும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு போக 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
அதன்படி, திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த இரண்டு தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டது.
அதில், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் தொகுதியில் தொல்.திருமாவளவன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.