கடல்வாழ் உயிரினங்கள் படங்கள் - சுகந்தி தேவதாசன் மீன் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி
தூத்துக்குடி அருகே உள்ள திரேஸ்புரம் கடற்கரை காலை நேரத்தின் பரபரப்போடு இயங்கிக்கொண்டிருந்தது. கடலுக்குச் சென்ற சிறு படகுகள் திரும்பிக் கொண்டிருந்தன. “குழம்பு வக்கக்கூட ஊழி மீன் கெடைக்க மாட்டேங்கு” என்று புலம்பிக் கொண்டே வந்தார் செல்வம் என்ற மீனவர். காசிமேட்டில் இருந்து கன்னியாகுமரி வரை முன்பு கிடைத்த மீன் இனங்கள் இப்போது கிடைப்பதில்லை என்கிறார்கள் மீனவர்கள்.
சுதும்பு, தெரக்குத்துவான் போன்றவை கிடைப்பதில்லை என்று கோவளம் மீனவர்களும் பூவாளி, குதிப்பு, சாவாளை போன்ற மீன்கள் கிடைப்பதில்லை என்று வேம்பார் அருகே உள்ள மீனவர்களும் கூறுகிறார்கள். “ஆத்துத் தண்ணி கடல்ல கலக்குற இடத்துல நெறைய மீன் கிடைக்கும். நாலஞ்சு வருஷமா சரியா மழை இல்ல. அதினால ஆத்துல தண்ணி இல்ல. மீனும் இல்ல,” என்றார் தருவைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி துரைசாமி. மேலும் மீன் வளம் பெருக மீன்களுக்கு புகலிடமாக விளங்கிய இயற்கை பவளப் பாறைகள் அழிந்துவிட்டதாலும் மீன்கள் குறைந்து விட்டதாகத் தெரிவித்தார்கள்.
“புவி வெப்பமயமாதல்னு சொல்றது கடலுக்குள்ள போறப்ப எங்களுக்கு நல்லா தெரியுது. முன்னால படகில எவ்வளவு நேரம் இருந்தாலும் வெயில் தாக்கம் தெரியாது. இப்போ அப்படி இல்ல,” என்றார் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரோச்மாநகரைச் சேர்ந்த டேவிட் என்ற மீனவர். கடலின் வெப்பம் அதிகரிப்பதும் தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலப்பதும் மீன்வளம் குறையக் காரணம் என்றார் வெள்ளப்பட்டியைச் சேர்ந்த ஸ்டீஃபன். மீன் வளம் குறைந்து வருவதால் கடலுக்குள் அதிக தூரம் செல்ல வேண்டியிருப்பதாகவும் கூறினார்கள்.
ஆனால் திரேஸ்புரத்தைச் சேர்ந்த செபஸ்தியான் உடல்நிலை சரியில்லாததால் கடலுக்குள் அதிக தூரம் செல்லாமல் ‘கல்' அருகில் மீன் பிடித்ததாகக் கூறினார். வள்ளம் என்று மீனவர்கள் குறிப்பிடும் சிறு படகில் தனியே சென்றுவந்த அவர் வலையில் விளைமீன், நகரை, கிளிமீன் போன்றவை இருந்தன. அவர் கல் என்று குறிப்பிட்டது, மீன்வளம் பெருகுவதற்காக கான்க்ரீட்டால் செய்யப்பட்டு கடலுக்குள் போடப்பட்ட கற்கள். பொதுவாக செயற்கை பவளப்பாறை என்று குறிப்பிடப்படும் அவை செயற்கை கடல்நீரடிப் பாறைகள்.
கான்க்ரீட் கற்களை கடலுக்குள் போட்டால் மீன்வளம் எப்படி பெருகும்? “முதலில் அந்தக் கற்களில் கடல் பாசி படிந்து வளர ஆரம்பிக்கும். பின்னர் அந்த பாசியை சாப்பிட சிறு உயிரினங்கள், அதைச் சாப்பிட மீன்கள் என்று ஒரு பெரிய உணவுச் சங்கிலி அங்கே உருவாகும்,” என்கிறார் கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையத்தின் சென்னைக் கிளைக்கு பொறுப்பு வகிக்கும் முனைவர் லக்ஷ்மிலதா.
சென்னையில் உள்ள எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையம் 2004 ஆம் ஆண்டு தூத்துக்குடி அருகே திரேஸ்புரம் மீனவர்களை ஒருங்கிணைத்து வான் தீவுக்கு அருகே ஒவ்வொன்றும் ஒரு டன் எடை கொண்ட 122 செயற்கை கடல்நீரடிப் பாறைகள் போட்டதாக ஆராய்ச்சி நிலையத்தின் பூம்புகார் மையத்தில் பணிகள் மேற்கொள்ளும் முனைவர் வேல்விழி தெரிவிக்கிறார்.
“எல்லா இடங்களிலும் பாறைகள் போட முடியாது. கடல் தரை சேறாக இல்லாமல், மீன்கள் கடந்து செல்லும் வழித்தடமாக இல்லாமல் இருக்க வேண்டும், எல்லா வகை வலைகளையும் உபயோகிக்க முடியாது என்று பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட கிராமத்தின் மீனவர்களோடு கலந்தாலோசித்து இடங்களைத் தேர்வு செய்கிறோம்,” என்கிறார் வேல்விழி.
பாறைகள் போட்டு ஆறு மாதத்திற்குள்ளாகவே அவற்றைச் சுற்றி மீன்வளம் பெருக ஆரம்பித்ததாக பாறைகளை கடலுக்குள் போட கடல் மீன் வள ஆராய்ச்சி நிலைய குழுவினரோடு இணைந்து பணி புரிந்த சூலேரிக்காட்டுகுப்பத்தைச் சேர்ந்த மீனவர் ரகேஷ் கூறினார்.
“அதுதான் செயற்கை பாறைகளின் வெற்றி. இதானால் அதிக தூரம் செல்ல முடியாத மீனவர்கள் இந்தப் பாறைகள் அருகிலேயே மீன் பிடித்து அதிகம் சம்பாதிக்க முடிகிறது. இதனால் மீன்களை விற்பனையில் ஈடுபடும் பெண்களின் வருமானமும் அதிகரிக்கிறது,” என்கிறார் கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையத்தின் கோவளம் மையத்தில் பொறுப்பு வகிக்கும் முனைவர் ஜோ கிழக்கூடன்.
தூத்துக்குடிக்கு அருகே உள்ள வெள்ளப்பட்டி கிராம மக்களுக்காக 2003 ஆம் ஆண்டு வான் தீவு அருகே கடல்நீரடிப் பாறைகளை தூத்துக்குடியைச் சேர்ந்த சுகந்தி தேவதாசன் மீன் ஆராய்ச்சி நிலையத்தினர் போட்டார்கள். இந்தப் பாறைகளைச் சுற்றி மீன் வளங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக நிலைய இயக்குநர் முனைவர் எட்வர்ட் பேட்டர்ஸன் தெரிவித்தார். பாறைகள் போடும் முன் இருந்த கடல் உயிரினக் கணக்கெடுப்புடன் குறிப்பிட்ட இடைவெளியில் எடுக்கப்பட்ட தரவுகளை ஒப்பிடுகையில் கடல்நீரடிப் பாறைகளைச் சுற்றி மீன், நண்டு, பவள வளம் தெளிவாகத் தெரிகிறது.
தங்கள் கிராமம் அருகே கடல்நீரடிப் பாறைகள் இருக்கும் எல்லா மீனவர்களும் இதை ஆமோதிக்கிறார்கள். “கடலில் போனா மீன் கிடைக்கலாம், கிடைக்காம போகலாம். ஆனா பாறை பக்கத்துல கண்டிப்பா மீன் கிடைக்கும். மத்த இடத்தில மீன் பிடிச்சா வருமானம் ரூ 1000த்தில இருந்து ரூ 5000 வரை கிடைக்கும். ஆனால் செயற்கை பவளப்பாறை பக்கத்தில பிடிச்சா ரூ 3500த்தில இருந்து ரூ 10000 வரை கிடைக்கும்” என்கிறார் வெள்ளப்பட்டியைச் சேர்ந்த மீனவர் குமார்.
ஏற்கெனவே கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையம் கடல்நீரடிப் பாறைகள் போட்டிருந்தாலும், கோவளத்து மீனவர்களை கல்பாக்கம் அணுமின் நிலைய அதிகாரிகள் அணுகியபோது, மீண்டும் பாறைகளே தங்கள் கிராம வளர்ச்சிக்கு உதவும் என்று கேட்டுக்கொண்டதால் கடந்த மார்ச் மாதம் அவை போடப்பட்டன என்கிறார் ரகேஷ்.
“மீன் வளம் பெருகுவதோடு, இந்தப் பாறைகள் கடல் அலைகளின் வீரியத்தைக் குறைப்பதால் கடல் சீற்றத்தைத் தடுத்து கடலோர கிராமங்களை பாதுகாக்கிறது. இதை உணர்ந்ததால்தான் பல மீனவர்கள் கடல்நீரடிப் பாறைகள் போட்டுத்தருமாறு கேட்கிறார்கள்,” என்கிறார் ஜோ கிழக்கூடன். “அதிக மீனவ கிராமங்கள் கோரிக்கை வைப்பதால் அரசும் இதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது,” என்றார் லக்ஷ்மிலதா.
இந்தக் கட்டுரை எர்த் ஜ்ர்னலிஸம் நெட்வொர்க்கின் வங்காள விரிகுடா நிதி (EJN Bay of Bengal fellowship) உதவியோடு வெளியிடப்படுகிறது.
- ஜென்ஸி சாமுவேல்