இன்றைக்குள் சின்னத்தம்பி பத்திரமாக மீட்கப்படுவான் என்ற நம்பிக்கையில் வனத்துறையினர் உள்ளனர்.
ஹைலைட்ஸ்
- சின்னத்தம்பியை பிடிக்க சுயம்பு, கலீம் என 2 கும்கிகள் பயன்படுத்தப்படுகிறது
- ஒரேயொரு மயக்க ஊசி மட்டும் போடப்பட்டுள்ளது
- காலில் பாய்ந்த மயக்க ஊசி பெயரி பாதிப்பை ஏற்படுத்தவில்லை
திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புதூர் கிராமத்தில் தஞ்சம் புகுந்த சின்னத்தம்பி, நேற்று கரும்புத் தோட்டத்திற்கு புகுந்து கரும்பை சுவைத்துக் கொண்டிருந்தது. நேற்று மாலையில் வெளியே வரும் என்று எதிர்பார்த்த வனத்துறையினர் யானையை பிடிக்க முன்னேற்பாடுகளை செய்து வைத்தனர்.
அதையும் மீறி போக்கு காட்டினால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் கும்கி யானை கலீம் உதவியுடன் சின்னத்தம்பியை வனத்துறையினர் விரட்டத் தொடங்கினர். அப்போது முதல்கட்டமாக மயக்க ஊசி துப்பாக்கி உதவியுடன் சின்னத்தம்பியை நோக்கி சுடப்பட்டது. இது குறி தவறி விட்டது.
பின்னர் மீண்டும் மயக்க ஊசி துப்பாக்கி மூலம் சரியாக சுடப்பட்டது. அந்த ஊசி காலில் பாய்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து சின்னத்தம்பி மீண்டும் கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்தது.
போடப்பட்ட மயக்க ஊசி முழுவதுமாக வேலை செய்யுமா என்பது சரிவர தெரியவில்லை. சின்னத்தம்பியை பிடிக்க சுயம்பு மற்றும் கலீம் என்ற 2 கும்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. சின்னத்தம்பி கரும்புத் தோட்டத்திற்குள் நுழைந்ததை தொடர்ந்து சுயம்பு ஒரு பக்கமும், கலீம் இன்னொரு பக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து போக்கு காட்டி வருவதால் வனத்துறை திணறி வருகிறது. ட்ரோன் உதவியால் சின்னத்தம்பி எங்கிருக்கிறான் என்பதை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மயக்க ஊசி வேலை செய்தால் அவனை பிடிப்பது சுலபமாகி விடும். இன்றைக்குள் சின்னத்தம்பி பத்திரமாக மீட்கப்படுவான் என்ற நம்பிக்கையில் வனத்துறையினர் உள்ளனர்.
மேலும் படிக்க - "சின்னத்தம்பியை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறை திட்டம்"