This Article is From Jun 19, 2019

தமிழகத்தில் 15-வது மாநகராட்சியாக ஆவடியை தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!

தமிழகத்தின் 15-வது மாநகராட்சியாக சென்னையை அடுத்துள்ள ஆவடி நகராட்சியை ஆவடி மாநகராட்சியாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 15-வது மாநகராட்சியாக ஆவடியை தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், நாகர்கோவில், ஒசூர், ஆகிய 14 மாநகராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. 

இதனிடையே, ராணுவ தளவாட ஆலை, ராணுவத்துக்கான ஆடை தயாரிக்கும் ஆலை என பல சிறப்புகளை உடையது ஆவடி. உட்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றுவதற்காக நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டகாலமாகவே கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து, ஆவடியை மாநகராட்சியாக மாற்றுவதற்கான பரிந்துரை தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும், பரிசீலனையில் உள்ள இந்த பரிந்துரை வெகுவிரைவில் அமல்படுத்தப் போவதாகவும் கூறப்பட்டு வந்தது. 

இந்நிலையில், 15-வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. நகராட்சியாக இருந்த ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவடி, பூவிருந்தவல்லி, திருவேற்காடு உள்பட நகராட்சிகள் இணைக்கப்பட்டு ஆவடி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய மாநகராட்சியில், ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள் இணக்கப்பட்டுள்ளன. மேலும் நெமிலிச்சேரி, வானகரம் உள்ளிட்ட 11 ஊராட்சிகளும் ஆவடி மாநகராட்சியுடன் இணைந்துள்ளன. 

மொத்தம் 148 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டதாக இந்த ஆவடி புதிய மாநகராட்சி அமைய உள்ளதாகவும், மக்கள் தொகை 6.12 லட்சமாகவும், 80 முதல் 100 வார்டுகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.