தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை, 3 வாரத்திற்குள் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பளித்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு ஆலையை மூடியது.
இதனை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிவில், ‘ஆலையை மூடியது சரியல்ல. 3 வாரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள வேண்டும்' என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.