தமிழகத்தில் இயங்கி வரும் கல்லூரிகளில் இனி செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாக கல்லூரி கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த அறிவிப்பு கல்லூரி செல்லும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உத்தரவு அரசு கல்லூரிகள், அரசு உதவி பெரும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளுக்கும் பொருந்தும். அதேநேரத்தில் மத்திய அரசால் இயக்கப்படும் ஐஐடி கல்லூரிக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் தெரிகிறது.
இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத கல்லூரியின் தலைமை ஆசிரியர் ஒருவர், ‘இந்தத் தடை உத்தரவுக்கு முக்கியக் காரணம், செல்போனில் இருக்கும் கேமராவை தவறாக பயன்படுத்தியது தான். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், அங்கு வேலை செய்யும் பெண் பேரசிரியைகளை அறுவறுக்கத்தக்க வகையில் படம் பிடிக்கின்றனர். அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்துவிடுகின்றனர்’ என்று நொந்து கொண்டார்.
அதே நேரத்தில் மற்றொரு கல்லூரியின் தலைமை ஆசிரியர், ‘நாங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே வகுப்புக்கு உள்ளே செல்போன் பயன்படுத்துவதை தடை செய்து தான் வைத்திருக்கிறோம். ஆனால், மாணவர்களுக்கு செல்போன் என்பது எவ்வளவு முக்கியம் என்பதும் எங்களுக்குத் தெரியும். அதனால், தான் வகுப்புக்கு வெளியே அதை பயன்படுத்த நாங்கள் அனுமதி அளித்துள்ளோம்’ என்று விளக்கினார்.
இந்தத் தடை உத்தரவு குறித்து கல்லூரி மாணவி டி.எலிசபத், ‘டிஜிட்டல் இந்தியா குறித்து வாய் கிழிய பேசுகிறோம். ஆனால், எப்படிப்பட்ட உத்தரவுகளை நாம் பிறப்பித்துள்ளோம் பாருங்கள்’ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அநன்யா சங்கர் என்ற இன்னொரு கல்லூரி மாணவியோ, ‘கல்லூரிக்கு வரும் போதே, நாங்கள் பெரியவர்களாகத்தான் நுழைகிறோம். எதை பயன்படுத்த வேண்டும், எதை பயன்படுத்தக் கூடாது என்ற முடிவை எங்களிடம் விட்டுவிடுவதுதான் சரியானது. பெண்களின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செல்போனை தடை செய்த பின்னரும், பல கல்லூரிகளில் பெண்கள் பாதுகாப்பாக உணரப் போவதில்லை என்பது தான் உண்மை’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
‘நான், என் மாணவர்களை வகுப்பிலேயே இணையத்தை பயன்படுத்த அனுமதிப்பேன். செல்போன் கேமரா மூலம் குறும்படங்கள் எடுப்பதையும் நான் ஊக்குவித்து வருபவன். மேலும், பேஸ்புக் மூலம் துறை சார்ந்த நடவடிக்கைகளை லைவ் செய்யுமாறும் கூறுவேன். எனவே, மாணவர்களுக்கு ஒரு தொழில்நுட்பக் கருவியை எப்படி முறைப்படி பயன்படுத்த வேண்டும் என்று நெறிபடுத்த வேண்டும். அதைவிடுத்து, அதற்குத் தடை போட்டால், புதிய எண்ணங்களுக்குத் தான் அது முடக்கப்போடும்’ என்று கூறுகிறார் லொயோலா கல்லூரியின் துணை பேராசிரியர் ஆண்ட்ரூ சேசுராஜ்.