ஹைலைட்ஸ்
- 2015-ம் மே -6-ம்தேதி ஜி.எஸ்.டி. மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
- ஜி.எஸ்.டி. கவுன்சில் சுமார் 30-க்கும் அதிகமான முறை கூடியுள்ளது
- ஜிஎஸ்டி மூலம் தமிழக அரசு பெற்ற வருவாய் குறித்த விவரங்கள் வெளியீடு
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக தமிழக அரசுக்கு கடந்த 9 மாதங்களில் மட்டும் ரூ. 31 ஆயிரத்து 350 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியிலும், வெவ்வேறு மாநிலங்களிலும் பல்வேறு வரி விதிப்பகள் நடைமுறையில் இருந்து வந்த நிலையில் அவை அனைத்தையும் ஒரே வரியாக மாற்ற மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2015-ம் மே -6-ம்தேதி ஜி.எஸ்.டி. மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கடந்த 2017 ஜூலை 1-ம்தேதியில் இருந்து ஜி.எஸ்.டி. நாடு முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விதிப்பு அதிகமாக இருப்பதாக கூறி பெரும் போராட்டங்கள் நடைபெற்றன.
இதனை சரி செய்வதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சில் சுமார் 30-க்கும் அதிகமான முறை கூடியுள்ளது. இதில் மத்திய நிதியமைச்சர், மாநில நிதியமைச்சர்கள் மற்றும் நிதித்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்று ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றம் குறித்து முடிவுகளை எடுத்தனர்.
இந்த நிலையில் ஜிஎஸ்டி மூலம் தமிழக அரசு பெற்ற வருவாய் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி கடந்த 9 மாதங்களில் மட்டும் தமிழக அரசுக்கு ரூ. 31 ஆயிரத்து 350 கோடி ரூபாய் வருமானம் ஜிஎஸ்டி மூலம் கிடைத்திருக்கிறது.