COVID-19 இன் அறிகுறிகளைக் காட்டாதவர்களுக்கு மட்டுமே மத இடங்களில் நுழைவது அனுமதிக்கப்படும்.
ஹைலைட்ஸ்
- பக்தர்கள் வழிபாட்டுத்தலங்களுக்குள் நுழைந்தவுடன் கைகளை கழுவ வேண்டும்
- பக்தர்கள் பாடுவதற்கு அனுமதி இல்லை
- நீராடுதல் என்கிற சடங்கு வழிபாட்டுத்தலங்களுக்குள் நடத்த அனுமதி மறுப்பு
Chennai: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5.85 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 90 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்று நோயாளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு பின்னர் இன்றுமுதல் வழிபாட்டுத்தலங்களை திறப்பதற்கான உத்தரவையும் வழிகாட்டுதல்களையும் மாநில அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி தமிழக கிராமப்புறங்களில் உள்ள 10 ஆயிரத்திற்கும் குறைவான வருவாய் கொண்ட வழிபாட்டுத்தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்படி, வழிபாட்டுத்தலங்களில் தொற்று அறிகுறியற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும், நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்த நோயாளிகள், சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் என நாள்பட்ட நோயாளிகள் வழிபாட்டுத்தலங்களுக்குள் செல்ல அனுமதியில்லை. அதே போல கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் வழிபாட்டுத்தலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழிபாட்டுத்தலங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படுபவர்கள் சிலைகளை தொடுவதற்கும், பிரசாதங்களை வழங்குவதற்கும், தேங்காய்களை உடைப்பதற்கும், புனித நீர் தெளிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிக்காட்டுதல்படி 2 மீட்டர் சமூக இடைவெளியுடன் வழிபடவும், கட்டித்தழுவுதல், கை குலுக்குதல் போன்ற நடைமுறைகளை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல பிரார்த்தனைக்கு பயன்படுத்தப்படும் துணிகளை தாங்கள் தனியாக கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழிபாட்டுத்தலங்களில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட பாடல்களும், இசைகளும் மட்டும் ஒலிக்கப்பட வேண்டும் என்றும், பக்தர்கள் பாடுவதற்கு அனுமதி இல்லையென்றும் அரசு வழிகாட்டியுள்ளது. இதன் மூலமாக தொற்று பரவலை தடுக்க வாய்ப்பிருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நீராடுதல் என்கிற சடங்கு வழிபாட்டுத்தலங்களுக்குள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வழிபாட்டுத்தலங்களுக்குள் நுழைந்தவுடன் கைகளை கழுவுவதையும், தொடர்ந்து சமூக இடைவெளியுடன் இயங்குவதையும் நிர்வாகம் உறுதி செய்திட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.