This Article is From Dec 20, 2018

‘ஜெயலலிதா குற்றவாளி கிடையாது..!’- நினைவிடம் கட்ட அனுமதி கோரும் தமிழக அரசு

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்டுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது

‘ஜெயலலிதா குற்றவாளி கிடையாது..!’- நினைவிடம் கட்ட அனுமதி கோரும் தமிழக அரசு
Chennai:

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்டுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் தமிழக அரசு சார்பில், ‘சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, நீதிமன்றம் குற்றவாளி என்று கூறவில்லை. அவரை வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்துவிட்டது. இதனால், அவரை குற்றவாளியாக கருத முடியாது' என்று வாதாடியது.

மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் ஒரு வழக்க்காக எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சத்யநாரயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகிய நீதிபதிகளின் கீழ் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

இது குறித்து மனுதாரர் தரப்பில், ‘சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கும் சேர்த்துத்தான் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு சார்பில் அவருக்கு நினைவிடம் கட்டக் கூடாது' என்று வாதாடப்பட்டது.

இதற்கு தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயண், ‘சொத்துக் குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை கர்நாடக நீதிமன்றம், ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுவித்து விட்டது. உச்ச நீதிமன்றமும் அவர் மீதிருந்த குற்றச்சாட்டுகளை நீக்கியுள்ளது. எனவே, அவர் குற்றவாளி கிடையாது. ஆகவே, அவருக்கு நினைவிடம் கட்டுவதில் எந்த சிக்கலும் இருக்கக் கூடாது.

மேலும், 6 முறை தமிழக முதல்வராகவும், லட்சக்கணக்கான தமிழக மக்களின் ஆதரவைப் பெற்றவருமான ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் தடைகள் இருக்கக் கூடாது. பல்வேறு நாடுகளில் அவர்களின் தலைவர்களுக்கு நினைவிடம் அமைப்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. நினைவிடம் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டால், வரும் மார்ச் மாதத்துடன் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும' என்று வாதாடினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக இணைந்து, கடந்த மே மாதம் 7 ஆம் தேதி, ஜெயலலிதா நினைவிடத்துக்கான அடிக்கல்லை நாட்டினர். அதைத் தொடர்ந்து பணிகள் வேகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நினைவிடத்துக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன.

.