Read in English
This Article is From Mar 30, 2020

கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக ரூ. 2 கோடியை வழங்கினார் தமிழக கவர்னர்!!

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணம் அடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement
தமிழ்நாடு Edited by

பல்வேறு பிரபலங்கள் கொரோனா நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.

Highlights

  • பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை குவிந்து வருகிறது
  • பிரதமர், முதல்வர் நிவாரண நிதிகளுக்கு தலா ரூ. 1 கோடி வழங்கினார் கவர்னர்
  • தமிழகத்தில் கொரோனா குணமாகி இதுவரை 6 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்
Chennai:

கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக ரூ. 2 கோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கியுள்ளார். இதில் ஒரு கோடி ரூபாய் பிரதமரின் குடிமக்கள் நிவாரண மற்றும் அவசரகால நிதிக்கும், ஒரு கோடி ரூபாய் தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த தகவலை கவர்னர் மாளிகை இன்று தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு தேசிய அளவில் பிரதமரும், தமிழக அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நிதி திரட்டி வருகின்றனர்.

இதற்காக பிரபலங்கள் பலர் கோடிக்கணக்கில் நிதியுதவி செய்துள்ளனர். இந்த நிலையில் தமிழக கவர்னர் 2 கோடி ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இதில் ஒருகோடி பிரதமர் நிவாரண நிதிக்கும், இன்னொரு கோடி ரூபாய் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கும் அளிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இதனைத் தவிர்த்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது ஒரு மாத ஊதியத்தை, பிரதமர் மோடியின் தேசிய நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இதேபோன்று தமிழக மக்களும் தேசிய மற்றும் மாநில நிவாரண நிதிக்கு மனம் முன்வந்து நிதி வழங்க வேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 1 கோடியை அளித்துள்ளார்.

Advertisement

சிதம்பரம் மகாராஷ்டிர சட்டமன்றத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அந்த அடிப்படையில் அவர் மகாராஷ்டிர மாநிலத்திற்கு நிதியுதவி அளித்துள்ளார். 

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 67 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 45 ஆயிரம் பேர் தமிழகம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்த எண்ணிக்கை 75 ஆயிரமாக இன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இதேபோன்று கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணம் அடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement