ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
ஹைலைட்ஸ்
- ஆளுநருக்கு எதிராக திமுக நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது
- இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்
- 'போராட்டம் வீரியமடையும்!'- ஸ்டாலின் ஆளுநருக்கு பதில்
Chennai:
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மாவட்ட அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்தி வருவதற்கு எதிராக திமுக நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதையடுத்து, ஆளுநர் மாளிகையிலிருந்து இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிடப்பட்டது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அழைத்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார். இப்படி, ஆய்வு நடத்துவதற்கு ஆளுநர் செல்லும் மாவட்டங்களில் எல்லாம் திமுக சார்பில் தொடர்ந்து கருப்புக் கொடி காட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று திமுக சார்பில் சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டது. திமுக-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆர்ப்படம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆளுநர் மாளிகையிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘ஆளுநருக்கு அரசியல் சட்ட சாசனம் அளித்துள்ள அதிகாரங்களை வைத்தே தொடர்ந்து அரசு அதிகாரிகளுடனான சத்திப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஆளுநரை முற்றுகையிடுவதோ அல்லது ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதோ நடந்தால் 7 ஆண்டுகள் சிறையில் இருக்கும்படியான சட்டங்களின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டாலின் அவர்களுக்கு ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் குறித்து தெரியாமல் நடந்து கொள்கிறாரா அல்லது ஆளுநர் மாளிகையை முற்றுகையிட வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி நடந்து கொள்கிறாரா என்பது தெரியவில்லை. ஆளுநர் அதிகாரிகளுடன் நடத்தும் சந்திப்புகள் தொடர்ந்து நடைபெறும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநரின் இந்த அறிக்கைக்கு ஸ்டாலின், ‘மாநிலங்களுக்கு ஆளுநர் தேவையில்லை என்பது தான் திமுக-வின் கருத்து. ஆனால், அந்தப் பதவி இருக்கும் வரை, அதற்கான மாண்பைக் கொடுப்போம். அதே நேரத்தில் வரம்பு மீறி அதிகாரத்தை ஆளுநர் பயன்படுத்தினாலோ, சிறையில் அடைத்து விடுவேன் என்று மிரட்டல் விட்டாலோ அதற்கு திமுக அஞ்சாது. ஆளுநரின் ஆய்வு தொடரும் என்றால், திமுக-வின் போராட்டங்களும் உச்சம் பெறும்’ என்று தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் ஆய்வு குறித்து சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அதிமுக அரசு நிராகரித்துள்ளது. இது குறித்து பேசியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ஒரு ஜனநாயக நாட்டில் ஆளுநரின் சந்திப்பு நடத்தப்படக் கூடாது என்றெல்லாம் சொல்ல முடியாது’ என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.