கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள்தான் கேரள எல்லையை ஒட்டி இருக்கின்றன.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு, கேரளத்தில் இருந்து வரும் நபர்களுக்கு எல்லையிலேயே மருத்துவ சோதனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசியுள்ள சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர், “கேரளாவில் இருந்து வருவோர்க்கு நிபா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய தமிழக - கேரள எல்லையில் இருக்கும் 7 மாவட்டங்களில் சோதனைச் சாவடிகளை அமைக்க உள்ளோம்” என்றுள்ளார்.
இது குறித்து மேலும் விரிவாக பேசிய சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் பி.வடிவேலன், “இதுவரை தமிழகத்தில் நிபா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக- கேரள எல்லையில் மருத்துவக் குழு சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளோம்.
கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் நபர்களில் யாருக்கேனும் காய்ச்சல் இருப்பது தெரிந்தால் அவர்களுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்படும்.
மேலும் கேரள எல்லையில் இருக்கும் 7 மாவட்டங்களின் அரசு மருத்துவமனைகளில் தனியாக நிபா வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் பாதிப்பு இருக்கும் நோயாளிகளுக்கு அங்கு வைத்து சிகிச்சை அளிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள்தான் கேரள எல்லையை ஒட்டி இருக்கின்றன.
வௌவால் கடித்த பழத்தை உண்பது மற்றும் வௌவாலின் சிறுநீர் பட்ட பழங்களை உண்பதால் நிபா வைரஸ் பாதிப்பு மனிதர்களுக்கு ஏற்படும்.
இது குறித்தும் கேரள எல்லையில் இருக்கும் மாவட்டங்களில் சுகாதாரத் துறை சார்பில் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.