This Article is From Jun 13, 2020

மகாராஷ்டிரா மாநிலத்தை விட தமிழகத்தில்தான் பரிசோதனை அதிகம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

கூடுதலாக நடமாடும் மருத்துவக் குழுக்கள், பள்ளி சிறார்களுக்கான மருத்துவக் குழுக்கள் உள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தை விட தமிழகத்தில்தான் பரிசோதனை அதிகம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

மகாராஷ்டிரா மாநிலத்தை விட தமிழகத்தில்தான் பரிசோதனை அதிகம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

தொற்று அதிகமுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தை விட தமிழகத்தில்தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

2,000 செவிலியர்கள் இன்று பணி நியமனம் செய்யபட்டனர். புதிதாக பணியில் சேர்ந்த செவிலியர்களை வாழ்த்தி, பணி நியமன ஆணைகளை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, சென்னையில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் படுக்கை வசதிகளையும் அதிகப்படுத்தி வருகிறோம்.

ஏற்கெனவே 4,893 செவிலியர்களை தமிழகம் முழுக்க நியமித்துள்ளோம். இன்றைக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மட்டும் 2,000 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 6 மாத காலத்திற்கு தற்காலிகப் பணியில் இருப்பார்கள். அவர்கள் இன்றே பணியில் இணைகிறார்கள்.

இவர்கள் சென்னையில் உள்ள 5 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தலா 400 செவிலியர்கள் என நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் செவிலியர்கள் பற்றாக்குறை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

கூடுதலாக நடமாடும் மருத்துவக் குழுக்கள், பள்ளி சிறார்களுக்கான மருத்துவக் குழுக்கள் உள்ளன. 254 வாகனங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பாரா மெடிக்கல் பணியாளர்கள், மருந்து, மாத்திரைகளுடன் சென்னை மாநகராட்சிக்கு இன்று அர்ப்பணிக்கப்படுகிறது. இதனால் எந்த புதிய தொற்றும் வர வாய்ப்பு இல்லை. வீடு, வீடாகக் கண்காணிப்பு சென்னையில் தொடர்கிறது. 

"தமிழகத்தில் 6 லட்சத்து 40 ஆயிரம் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். மகாராஷ்டிராவில் 5 லட்சத்து 90 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். ராஜஸ்தானில் 5.4 லட்சம் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர்.

ஆந்திராவில் 5 லட்சம், கர்நாடகா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் 4 லட்சம், மேற்கு வங்கத்தில் 3 லட்சம் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பரிசோதனைகளை அதிகரிப்பதன் மூலம் நோய்த்தடுப்பை தீவிரப்படுத்த முடியும்" என்றார்.

.