அடுத்த கட்டமாக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையை பொறுத்து தமிழகத்தில் பொது முடக்கம் குறித்து முடிவு எடுக்கப்படும்.
Salem: கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ஏற்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் தமிழக அரசுக்கு ரூ. 35 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது-
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. மார்ச் கடைசி வாரம், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பொது முடக்கத்தால் தமிழக அரசுக்கு ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் நலத் திட்டங்கள் எந்த வித பாதிப்பும் இல்லாத அளவுக்கு செயல்படுத்தப்படும். மத்திய அரசு பொது முடக்கத்தை மே 31 வரையில் நீட்டித்திருக்கிறது. அடுத்த கட்டமாக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையை பொறுத்து தமிழகத்தில் பொது முடக்கம் குறித்து முடிவு எடுக்கப்படும்.
திமுகவின் ஆர்.எஸ். பாரதி கைதுக்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சட்டத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்களை விமர்சனம் செய்ததால்தான் புகார் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின் புகார்களைக் கூறி வருகிறார்.
ஆர்.எஸ். பாரதி இழிவாகப் பேசிய போதே கட்சித் தலைவரான ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். ஆர்.எஸ். பாரதி தரும் புகார்களில் உண்மைத் தன்மையை ஊடகங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
அரசின் இ-டெண்டரில் முறைகேடு நடப்பதாக ஆர்.எஸ். பாரதி கூறுவது பொய். ஏதோ விஞ்ஞானி போல ஆர்.எஸ். பாரதி ஊடக விளம்பரத்துக்காகப் புகார்களை கொடுக்கிறார்.
கரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகம் கேட்ட நிதியில் போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. மருத்துவர் நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும். புறநகர் பகுதிகளில் சிறு, குறு தொழில்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.
இவ்வாறு தமிழக முதல்வர் தெரிவித்தார்.