This Article is From Feb 22, 2020

நெடுஞ்சாலை விபத்துகளில் தமிழகமே முதன்மை இடத்தில் உள்ளது: கே.எஸ்.அழகிரி வேதனை

நெடுஞ்சாலைகளில் இத்தகைய விபத்துகள் ஏற்படும்போது, உடனடியாக சிகிச்சை வழங்குவதற்கு ஆம்புலன்ஸ் வசதிகள் மற்றும் முதலுதவி சிகிச்சைகள் வழங்குவதற்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய - மாநில அரசுகளுக்கு இருக்கிறது.

நெடுஞ்சாலை விபத்துகளில் தமிழகமே முதன்மை இடத்தில் உள்ளது: கே.எஸ்.அழகிரி வேதனை

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக தலா ரூபாய் 25 லட்சம் வழங்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி

நெடுஞ்சாலை விபத்துகளில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை இடத்தை பெற்றிருப்பது மிகுந்த வேதனைக்குரியது எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரிலிருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரியும் நேற்று அதிகாலை நேருக்கு நேர் மோதிக்கொண்டன.  

இந்த கோர விபத்தில், 3 பெண்கள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கண்டெயனர் லாரியின் டயர் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிவேகமாகச் சென்ற லாரியின் டயர் வெடித்ததைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்து மீது மோதியதாகத் தெரிகிறது. 

இந்நிலையில், இது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, "திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கேரள அரசுக்குச் சொந்தமான குளிர்சாதன வசதி கொண்ட சொகுசுப் பேருந்துடன் கண்டெய்னர் லாரி மோதியதில் 19 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

விபத்தில் இறந்தவர்களின் சடலங்களை மீட்பதிலும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சை அளிப்பதிலும் கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் காலம் தாழ்ந்துதான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

நெடுஞ்சாலைகளில் இத்தகைய விபத்துகள் ஏற்படும்போது, உடனடியாக சிகிச்சை வழங்குவதற்கு ஆம்புலன்ஸ் வசதிகள் மற்றும் முதலுதவி சிகிச்சைகள் வழங்குவதற்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய - மாநில அரசுகளுக்கு இருக்கிறது.

மேலும், நெடுஞ்சாலை விபத்துகளில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை இடத்தை பெற்றிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. இதற்குரிய காரணத்தைத் தமிழக அரசு ஆய்வு செய்து அதனைக் களைவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக தலா ரூபாய் 25 லட்சம் வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

.