மேகதாது அணையால் கர்நாடகவை விட தமிழகத்திற்கே அதிக நன்மை உள்ளது.
Bengaluru: மேகதாது அணை விவகாரத்தை அதிமுகவும், திமுகவும் அரசியலாக்க வேண்டாம் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழகத்தை சேர்ந்த முக்கிய இரண்டு கட்சிகளான அதிமுகவும், திமுகவும் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் நடக்க விடாமல் தடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து மாநிலங்களவை நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசுக்கு மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பிற்கு பின் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மேகதாது அணையால் கர்நாடகவை விட தமிழகத்திற்கே அதிக நன்மை உள்ளது. இந்த விவகாரம், இந்தியா - பாகிஸ்தான் எல்லை பிரச்சனையை போன்று பெரிய விஷயம் இல்லை. 15 நாட்களுக்குள் இருதரப்பும் அமர்ந்து பேசினால் தீர்க்கக்கூடிய ஒன்று தான். நாம் எல்லாம் சகோதரர்கள் தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது மேகதாதுவில் அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு முதல்வர் குமாரசாமி நன்றி தெரிவித்தார்.