பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை மேலும் கடுமையாக்கும் வகையிலான சட்டத்திருத்தங்களை முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
இது குறித்து சட்டசபையில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பினை மேலும் உறுதி செய்வதற்கு தமிழக அரசு, 1860-ம் ஆண்டைய இந்திய தண்டனைச் சட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை மேலும் கடுமையாக்கிட மத்திய அரசின் அனுமதி பெற்று கீழ்க்கண்ட சட்டத் திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்.
1) பிரிவு 304-Bல் வரதட்சணை தொடர்பான மரணங்களுக்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையை, குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் தண்டனையாக வழங்குதல்,
2) பிரிவு 354-Bல் குற்ற நோக்கத்துடன் (பெண்களின் ஆடைகளை களைதல்) செயல்படுவதற்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாகவும், அதிகபட்சமாக வழங்கப்படும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையை கடுமையாக்கி பத்தாண்டுகளாகவும் வழங்குதல்,
3) பிரிவு 354-Dல் தவறான குற்ற நோக்கத்துடன் பெண்களை பின்தொடர்ந்தால், இரண்டாம் முறையும், தொடர்ந்தும் குற்றமிழைத்தால் தற்போது வழங்கப்படும் ஐந்தாண்டுகள் வரையான சிறை தண்டனையை, அதிகபட்சமாக ஏழு ஆண்டுகளாக்கவும்,
4) பிரிவு 372ல் பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்குட்பட்ட நபர்களை விற்பனை செய்தல் மற்றும் பிரிவு 373ல் பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்குட்பட்ட நபர்களை விலைக்கு வாங்குதல், தற்போது வழங்கப்படும் அதிகபட்சமான பத்தாண்டுகள் வரையிலான சிறை தண்டனைக்கு பதிலாக, குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் வழங்குவதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்'.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.