நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வு பயத்தால் மற்றொரு மாணவி தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் உருக்கமான கடைசி ஆடியோ பதிவு வெளியானது.
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில், நேற்று மதுரையைச் சேர்ந்த சார்பு ஆய்வாளரின் 19 வயது மகள் ஜோதி துர்கா என்ற மாணவி நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். நீட் தேர்வு நாளை (செப்.13) நடைபெற உள்ள நிலையில், நீட்தேர்வு குறித்து பயமாக இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்து வந்தார். ஆனால், அவரை அவரது பெற்றோர் ஆசுவாசிப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று தனி அறையில் படித்துக் கொண்டிருக்கும் போது, நீட் தேர்வு பயத்தால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மாணவி கடைசியாக உருக்கமான ஆடியோவைப் பதிவு செய்துள்ளார். அதில் அவர், 'எல்லோருமே என்னிடம் ரொம்ப அதிகமாக எதிர்பாத்தனர். இது என்னுடைய முடிவுதான். நான் தான் எனது தவறுக்கு காரணம். சாரி. எனக்கு ரொம்ப ஹேப்பியான குடும்பம் கிடைச்சிருக்கு. எனக்கு தான் அத பாதுகாக்க தெரியல. நான் போறேன். அம்மா நா உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவேன். என்ன மன்னிச்சிருங்க' இவ்வாறு மாணவி உருக்கமாக அழுதுகொண்டே பேசியுள்ளார்.
மாணவி ஜோதி துர்காவின் இந்த ஆடியோ அனைவரையும் அதிர்ச்சியும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இவர் ஏற்கனவே கடந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வியடைந்திருந்தார். இந்தாண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காகவே கடுமையாக படித்துக்கொண்டிருந்தார். ஆனால், நீட் தேர்வு பயத்தால் விபரீத முடிவுக்குச் சென்றுவிட்டார்.