தமிழக அரசின் மேல்முறையீடு திங்களன்று விசாரிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
New Delhi/ Chennai: தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரையில் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.இந்த மனு, திங்களன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மதுக்கடைகள் மே 7 முதல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் டாஸ்மாக் கடையை திறக்க தடை விதிக்க முடியாது என்று தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் டாஸ்மாக் மதுக்கடைகள் தமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் திறக்கப்பட்டன.
மதுப்பிரியர்களும் சில கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். இந்த நிகழ்வின்போது சமூக விலகல் ஏதும் கடைபிடிக்கப்படவில்லை என்பதை சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் காட்டியது.
இந்த நிலையில், சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் பொது முடக்கம் முடியும் மே 17-ம்தேதி வரையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்து உத்தரவிட்டனர்.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.