Chennai:
தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று அந்நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
வேதாந்தாவின் கோரிக்கையை ஏற்ற தேசிய பசுமை தீர்ப்பாயம் மூன்று வாரங்களில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், தமிழக அரசின் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சம்பு கல்லோலிகர் வேதாந்தா நிறுவனத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசும் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் மேல்முறையீடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதனால் ஆலையின் செயல்பாட்டுக்கான ஒப்புதலைப் புதுப்பிக்கவும், பராமரிப்புக்காக ஆலை வளாகத்தைத் திறக்கவும் விடுத்துள்ள கோரிக்கையைப் பரிசீலிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளது.
தமிழக அரசின் மேல்முறையீடு வழக்கைக் காரணம் காட்டித் தற்போது வேதாந்தா நிறுவனத்துக்குத் தடை விதித்துள்ளது மாசுக் கட்டுப்பாடு வாரியம்.
பராமரிப்புக் காரணங்களுக்காகக் கூட ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கூடாது என்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெளிவு படுத்தியுள்ளது.
இந்நிலையில் வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முன்னரே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கோரி வேதாந்தா அளித்த மனு மீதான விசாரணையை ஜனவரி 8-ம் தேதி எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.