This Article is From Jan 28, 2019

மேகதாது அணை: தமிழகத்தின் அனுமதி இல்லாமல் ஒப்புதல் அளிக்கக் கூடாது! - பிரதமரிடம் கோரிக்கை

மேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரத்தில், தமிழக அரசின் அனுமதி இல்லாமல் கர்நாடகாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று கோரி பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.

மேகதாது அணை: தமிழகத்தின் அனுமதி இல்லாமல் ஒப்புதல் அளிக்கக் கூடாது! - பிரதமரிடம் கோரிக்கை
Madurai:

கர்நாடக அரசு தன்னிச்சையாக, மேகதாது அணை கட்டுவதற்கு வரைவு திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. அதனை மத்திய அரசும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகம் வருகை தந்தார். அப்போது, பிரதமரை நேரில் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக 17 கோரிக்கைகள் அடங்கிய 95 பக்க மனுவை அளித்துள்ளார்.

அதில், காவிரி மேகதாது திட்ட விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வழங்கப்பட்ட ஒப்புதலை மத்திய நீர்வள ஆணையம் திரும்ப பெற மத்திய நீர்வள அமைச்சகம் அறிவுறுத்த வேண்டும். இந்த திட்டம் தொடர்பான விரிவான அறிக்கையை நிராகரிக்க வேண்டும்.

தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் காவிரி படுகையில் எந்தவித கட்டுமான பணிகளும் நடைபெற கூடாது என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய நீர்வள அமைச்சகம், நதி நீர் மேம்பாடு அமைப்பு திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்ட வேண்டும். கஜா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சீரமைக்க கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

.