தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் இடையேயான பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கின.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் பேருந்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு, தற்போது பேருந்து சேவைகள் தொடங்கியுள்ளன.
சென்னையில் இன்று மட்டும் சுமார் 400 பேருந்துகள் வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்பட்டது. பல மாதங்களுக்குப் பிறகு பேருந்து சேவைகள் இயக்கப்பட்டதால், மக்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகாலை முதலே பயணிகள் வரத்தொடங்கினர்.
முதல் நாள் என்பதால் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்து வந்தனர். முகக்கவசம் அணியாதவர்களை பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தினர்.
இதுதொடர்பாக போக்குவரத்து ஊழியர் ஒருவர் கூறுகையில், 'கொரோனா பரவல் காரணமாக பயணிகள் கூட்டம் சற்று குறைவாகவே உள்ளது. கலெக்ஷனும் கம்மியாக தான் உள்ளது. குறைந்தது ஒரு பேருந்தில் 35 பேர் உள்ளனர். முகக்கவசம், கை சுத்திகரிப்பான் ஆகியவை மக்கள் பயன்படுத்துகின்றனர்' இவ்வாறு போக்குவரத்து ஊழியர் தெரிவித்தார்.