This Article is From Jul 20, 2019

அணை பாதுகாப்பு மசோதாவை தமிழகம் எதிர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

அனைத்து மாநிலங்களிலும் இருக்க கூடிய அணைகளை பாதுகாப்பு என்ற பெயரில் அபகரிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. அணைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாநிலங்களுடையது.

Advertisement
தமிழ்நாடு Written by

அணை பாதுகாப்பு மசோதாவை தமிழகம் எதிர்க்க வேண்டும்

அணை பாதுகாப்பு மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது, எனவே அந்த மசோதாவை தமிழகம் எதிர்க்க வேண்டும் என சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் காரணமாக, தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைய உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள், ஜூலை 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இந்தக் கூட்டத் தொடரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து, ஜூலை 30-ம் தேதி வரை என 23 நாட்களுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து துறை வாரிய மானியக் கோரிக்கைகள் சட்டப்பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், விதி எண் 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அந்தவகையில், அணை பாதுகாப்பு மசோதா தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 

அப்போது பேசிய அவர், அனைத்து மாநிலங்களிலும் இருக்க கூடிய அணைகளை பாதுகாப்பு என்ற பெயரில் அபகரிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. அணைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாநிலங்களுடையது. அணை பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனில் தேவையான நிதியினை மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுக்கலாம். மாநில சட்டமன்றங்களின் தீர்மானங்களை மதிக்காமல் மத்திய அரசு நடந்து கொள்கிறது. அணை பாதுகாப்பு மசோதாவை தமிழகம் எதிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Advertisement

இதற்குப் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாநிலங்களும் ஏற்று கொள்ளும் வரை இதை ஏற்கக் கூடாது என ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளோம். அதுமட்டுமில்லாமல் மசோதா தமிழகத்திற்கு ஏற்றது அல்ல எனக்கூறி அதனை திரும்பப் பெற கடிதம் எழுதியுள்ளோம். 

தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு சொந்தமான 4 அணைகள் கேரளாவில் இருந்தாலும் அவை தமிழகத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. அதிமுக நாடாளுமன்ற உறுபினர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அணை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

Advertisement

இதனிடையே, வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், 10 நாட்களுக்கு முன்னதாகவே, சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிவடைய உள்ளது. 
 

Advertisement