கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் காரணமாக லாரி ஓட்டுனர் தலைமறைவாகியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியது. லாரி டிரைவர் தப்பியோட்டம்
- கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது
- கல்லூரி மாணவர்கள் ஊட்டிக்கு செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டிருக்கிறது
Coimbatore: திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரி பொறியியல் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். அவினாசி அருகே கார் ஒன்று இன்று அதிகாலை லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.
கொரோனா வைரஸ் காரணமாக சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று விடுமுறையை அறிவித்தது. இதையடுத்து அந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 7 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு காரில் புறப்பட்டுச் சென்றனர்.
அவர்கள் கோவையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அவினாசியை அருகேயுள்ள பழங்கரை என்ற இடத்திற்கு வந்தபோது, கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அதிவேகமாக சென்று லாரி ஒன்றின்மீது மோதியது.
இந்த சம்பவத்தில் 4 மாணவர்கள் மற்றும் டிரைவர் ஒருவர் என 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 மாணவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் வெங்கடாச்சலம், ராஜேஷ், வசந்த், இளங்கோவன் என தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் 21 வயதுடையவர்கள். இதேபோன்று ஓட்டுனர் மணிகண்டன் என்பவரும் உயிரிழந்தார்.
கார்த்தி, ஜெய சூர்யா, சந்தோஷ் ஆகிய 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 2 பேர் திருப்பூர் அருகே தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கார்த்தி என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் காரணமாக லாரி ஓட்டுனர் தலைமறைவாகியுள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்பாகத்தான் கேரளா பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.