New Delhi: தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு மனு செய்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்த மே 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நடைபெற்ற போராட்டத்தில், போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து ஆலையை மூடி சீல் வைக்கப்பட்டு, மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலையைத் திறக்க வேண்டி மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் ஆணைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டனர்.
மேலும், இதுகுறித்து பதில் மனுத்தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தனர். இதுகுறித்து தமிழக அரசு இன்று தாக்கல் செய்த மனுவில், வேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்றும், அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)