தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் சென்னையில் இடியுடன் கூடிய மழை பொழிந்து வருகிறது. இதையடுத்து, இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அனேக இடங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம், ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, இன்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அதே நேரத்தில் லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்’ என்று தெரிவித்துள்ளது.
மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன், தனது முகநூல் பக்கத்தில், ‘சென்னையில் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக வட சென்னையில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. 2018-ல் சென்னையின் எழும்பூர் தான், முதன் முதலாக 100 மி.மீ மழையைப் பெற்றுள்ளது. இன்று முழுவதும் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர் மழை இருக்கும்’ என்று பதவிட்டுள்ளார்.
குறிப்பாக வானிலை ஆய்வு மையம், ‘அரபிக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி மகி கன மழை பெய்யும்’ என்று கூறி தமிழகத்துக்கு அன்று ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து அரசு துறைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்று கனமழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.