This Article is From Dec 18, 2019

அதிமுக - பாமகவை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: மு.க.ஸ்டாலின்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை பெறுவோர் பட்டியலில் உள்ள அண்டை நாடுகளில் பட்டியலில் இலங்கை இடம்பெறாமல் போனது ஏன்? அகதிகளாக வரும் வேறு மதத்தினரில் இஸ்லாமியரை தவிர்த்திருப்பது ஏன்?

அதிமுக - பாமகவை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: மு.க.ஸ்டாலின்

23ம் தேதி சென்னையில் குடியுரிமை திருத்தத் சட்டத்திற்கு எதிராக மிகப்பெரிய பேரணி!

தமிழின துரோகிகளான அதிமுக - பாமகவை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளன. இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமிய பல்கலைகழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து, நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன

இந்நிலையில், குடியுரிமை சட்டம் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆலோசிக்க சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இதைதொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியாவது, குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என இன்று நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. வருகிற 23ம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் குடியுரிமை திருத்தத் சட்டத்திற்கு எதிராக மிகப்பெரிய பேரணியை நடத்துவது என்று முடிவுசெய்துள்ளோம்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை பெறுவோர் பட்டியலில் உள்ள அண்டை நாடுகளில் பட்டியலில் இலங்கை இடம்பெறாமல் போனது ஏன்? அகதிகளாக வரும் வேறு மதத்தினரில் இஸ்லாமியரை தவிர்த்திருப்பது ஏன்? இந்த இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துத்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேர், பாமக மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் என தமிழகத்திலிருந்து 12 பேர் இந்த சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்ததால்தான் இந்த சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்கள் தமிழின துரோகிகள் என்றுதான் அடையாளம் காணப்படுவார்கள். அவர்களை மக்கள் மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள்.” 

வருகிற திங்கள்கிழமை நடைபெறவுள்ள பேரணியில் கட்சிக்கும், அரசியலுக்கும் அப்பாற்பட்ட மாணவர்களும், பொதுமக்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன் எனத் தெரிவித்தார்.

.