புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலையில் ஜல்லிக்கட்டு(Viralimalai Jallikattu) போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது-
இன்றைக்கு தமிழன் என்றால் அவனுக்கு தனி பெருமை உண்டு. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை பிறக்கும் போதே இந்த ஜல்லிக்கட்டு திருவிழா துவங்கி வருகிறது.
இது வீர விளையாட்டு. ஆகவே நம் முன்னோர்கள் இந்த வீர விளையாட்டை நமக்கு வழங்கி விட்டுச் சென்றிருக்கிறார்கள். தொன்றுதொட்டு இந்த ஜல்லிக்கட்டு திருவிழா நம்முடைய வீரர்களின் திறமையை வெளிப்படுத்தும் விழாவாக உள்ளது.
இன்றைக்கு தமிழகத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்கள் ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்றுள்ளன. அவற்றுக்கு இணையாக விராலி மலையிலும் ஜல்லிக்கட்டு தொடங்கப்பட்டுள்ளது. இது சாதாரண விழா இல்லை.
விவசாயிகள் தங்களது பிள்ளைகளைப் போல் வளர்த்து காளைகளை போட்டியில் பங்குபெறச் செய்துள்ளனர். தமிழன் என்றால் வீரத்திற்கு பெயர் பெற்றவன். இதனை நாட்டு மக்களுக்கு உணர்த்தும் விதத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியே இந்தப்போட்டி நடைபெறுகிறது.
முதன்முறையாக பார்வையாளர்களுக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பெருமை கொள்கிறேன். நானும் ஒரு விவசாயி என்பதால் நாங்கள் வளர்த்த காளைகளை இளைஞர்கள் பிடிக்கும் காட்சியைக் கண்டு உற்சாகம் அடைகிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மேலும் படிக்க: கின்னஸ் சாதனை முயற்சி: 2 ஆயிரம் காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு தொடங்கியது