கோட் சூட் அணிந்திருக்கும் தமிழக முதல்வரின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், லண்டனில் தமிழக சுகாதாரத்துறை தொடர்பாக 2 முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய 3 நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர்.
முதல்கட்டமாக லண்டன் வந்த தமிழக முதல்வருக்கு, லண்டன் வாழ் தமிழர்கள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாகிகளை சந்தித்து தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தினர்.
இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 'அயல்நாடுகளில் மருத்துவத்துறையில் செயல்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பணித்தரத்தின் மேம்பாடுகளைக் கண்டறிந்து அவற்றை தமிழகத்தில் செயல்படுத்த சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினருடன் சந்திப்பு நடைபெற்று வருகிறது.' என்று கூறியிருந்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, இங்கிலாந்தில் இருக்கும் மருத்துவ வசதிகளை தமிழ்நாட்டிற்கும் கொண்டு வருவது தொடர்பாக பேசப்பட்டது. அப்போது முதல்வர் பழனிசாமி கோட் சூட் அணிந்து காணப்பட்டார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரும் கோட் சூட் அணிந்திருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. இதுதொடர்பாக மீம்சுகளும் அதிகளவு வெளிவந்துள்ளன.
லண்டன் பயணத்தின் முக்கிய நிகழ்வாக சுகாதாரத்துறையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழக முதல்வர் ஏற்படுத்தியுள்ளார். இதன்படி, மருத்துவர்கள், நர்சுகள் பணிப்பாதுகாப்பு விஷயத்திலும், கொசுக்களால் பரவும் நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனம் தமிழகத்திற்கு உதவும்.