தமிழிசை, திருநாவுக்கரசர் வாதச் சண்டை.
ஹைலைட்ஸ்
- மக்களவைத் தேர்தலுக்கு திமுக-வுடன் கூட்டணி வைத்துள்ளது காங்கிரஸ்
- பாஜக, தனது கூட்டணியை இன்னும் உறுதி செய்யவில்லை
- தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது பாஜக
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சில நாட்களுக்கு முன்னர், ‘தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட்டாலும் 10 தொகுதியில் வெற்றி பெறும். அந்த வெற்றியை பிரதமர் மோடிக்கு சமர்பிப்போம்' என்று கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், '10 தொகுதியில்தான் பாஜக வெற்றி பெறும் என்று அவரே கணித்துள்ளார். அப்போது, மீதம் இருக்கும் 30 தொகுதிகளை காங்கிரஸ்- திமுக கூட்டணிக்கு தமிழிசையே விட்டுத் தருகிறாரா..?
கள எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு தமிழிசை பேசியுள்ளார். அதே நேரத்தில் ஒரு விஷயத்தில் எதார்த்தத்தை மிஞ்சி பேசியுள்ளார். 10 தொகுதியில் பாஜக வெற்றி பெறும் என்கிறார். பத்தில் 1 என்ற எண்ணை எடுத்து விடுவோம். மீதம் இருக்கும் எண்ணில்தான் அவர்களின் வெற்றி இருக்கும்' என்று கேலி செய்துள்ளார்.
இதற்கு உஷ்ணமான தமிழிசை, '10 தொகுதியில் பாஜக-வை தனித்து வெற்றி பெற வைப்பேன் என்று சொல்லியிருப்பது எனது தன்னம்பிக்கையின் வெளிப்பாடு. அதை அவர் கேலி செய்கிறார். முதலில் காங்கிரஸ் எந்த ஒரு கூட்டணியிலும் இல்லாமல் தேர்தலை சந்திக்கட்டும். அதன் பிறகு அவர்கள் குறித்து பேசுவோம்' என்று பதிலடி கொடுத்து வருகிறார்.
மக்களவைத் தேர்தல் வர இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே இருப்பதனால், பிரதான அரசியல் கட்சிகள் வாதப் போரில் ஈடுபட்டு வருகின்றன. அதன் வெளிப்பாடே தமிழிசை, திருநாவுக்கரசர் வாதச் சண்டை.