தமிழக பாஜக (BJP) தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் (Tamilisai Soundararajan)
தனக்கு முன்னால் ஆட்டோ டிரைவர் ஒருவர் தாக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன் (Tamilisai Soundararajan).
சென்னை, சைதாப்பேட்டையில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பாஜக (BJP) தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அவருக்கு பின்னால் இருந்த ஒரு ஆட்டோ டிரைவர், ‘பெட்ரோல் விலை ஏன் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது?’ என்று கேட்டார்.
இதற்கு தமிழிசை, திரும்பிப் பார்த்து சிரித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார். ஆனால், கேள்வி கேட்ட ஆட்டோ டிரைவரை, தமிழிசை உடன் வந்திருந்தவர்கள் அப்புறப்படுத்தினர். அதுவும் தமிழிசை பேட்டி கொடுத்த வீடியோவில் பதிவானது.
இந்த சம்பவம் பூதாகரமாகியுள்ள நிலையில் இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, ‘அந்த ஆட்டோ ஓட்டுநர் குடி போதையில் இருந்தார். இதனால் என்னுடன் வந்தவர்கள் மற்றவர்களின் பாதுகாப்புக் குறித்து கவலையடைந்து அவரை அப்புறப்படுத்தினர். ஆனால், இந்த சம்பவத்தின் போது நான் சிரித்துக் கொண்டிருந்தது போல ஊடகங்களில் காண்பிக்கப்படுகிறது. மற்றப்படி அப்போது எனக்குப் பின்னால் என்ன நடந்தது என்பது குறித்து தெரியாது’ என்று விளக்கம் அளித்துள்ளார்.