நடிகர் அஜித்தை பாஜக-வுக்கு இழுக்க அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், முயற்சி செய்ததாக அரசியல் களத்தில் பரபரக்கப்பட்டு வந்த நிலையில், அவர் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
திருப்பூரில் இளைஞர்கள் சிலர் பாஜக-வில் இணைந்துள்ளனர். அவர்கள் நடிகர் அஜித் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த இணைப்பு விழாவில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “திரைப்பட கலைஞர்களில் அஜித் நேர்மையானவ்ர். தான் சம்பாதித்தப் பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அஜித் ரசிர்களும் நல்லவர்கள்தான். அவர்கள் மோடியின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்” என்று பேசியதாக கூறப்பட்டது.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அஜித்தை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவினர் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் பரவின.
இதையடுத்து அஜித் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபட ஆர்வம் இல்லை. ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல். நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்லை. நிர்பந்திக்கவும் மாட்டேன். நான் சினிமாவில் தொழில் முறையாக வந்தவன். நான் அரசயில் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவே இங்கு வரவில்லை. என் ரசிர்களுக்கும் அதையேதான் நான் வலியுறத்தியிருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் பெற்று வரும் நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, “அஜித்தை நான் இன்றைக்கும் மதிக்கிறேன். ஒரு சம்பவம் சொல்கிறேன். நான் குழந்தை நல மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு அவர் உதவி செய்தார். அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவர் அஜித். அப்படிப்பட்டவரின் ரசிகர்கள்தான் நீங்கள் என்றுதான் நான் பேசினேன்.
நாங்கள் அஜீத்தை பாஜக-வில் சேருமாறு அழைப்பு விடுக்கவில்லை. அவர் நடிக்க ஆசைப்பட்டால், நடிக்க மட்டும் செய்யட்டும். அதற்கு யாரும் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை. மாணவர்களைத் தவிர வேறு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதை மையப்படுத்தித்தான் நான் பேசினேன். அவரது நிலைப்பாட்டில் அஜித் ஸ்திரமாக இருப்பதை வரவேற்கிறேன். அதேபோல எனது நிலைப்பாட்டிலும் நான் ஸ்திரமாக இருக்கிறேன். சில தொலைக்காட்சிகளில் அஜித்தை அரசியலுக்கு நான் அழைத்தாதாக சொல்லப்படுகிறது. தெளிவாக சொல்கிறேன், அப்படி எந்த அழைப்பு விடுக்கப்படவில்லை” என்று விளக்கினார்.