This Article is From Feb 08, 2019

தமிழக பட்ஜெட்டை புகழ்ந்து தள்ளிய தமிழிசை!

தமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்

தமிழக பட்ஜெட்டை புகழ்ந்து தள்ளிய தமிழிசை!

பல்வேறு அரசியல் தலைவர்கள் பட்ஜெட் குறித்து கருத்து கூறி வருகிறார்கள். 

ஹைலைட்ஸ்

  • பட்ஜெட்டில் பல முக்கிய அம்சங்கள் உள்ளன, தமிழிசை
  • இது ஏட்டுச் சுரைக்காய் பட்ஜெட், ஸ்டாலின்
  • ஏட்டுச் சுரைக்காய் அல்ல, நாட்டுச் சுரைக்காய் பட்ஜெட், ஜெயக்குமார்

தமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இதையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள் பட்ஜெட் குறித்து கருத்து கூறி வருகிறார்கள். 

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், ‘தமிழக பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இருந்தன. மாணவர்களுக்கு 5000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படுவதற்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. மதிப்பிற்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு, கல்லூரி அமைப்பது தொடர்பான அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. அதேபோல பல்வேறு மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு, விரிவாக மக்களுக்கு எடுத்துச் செல்ல அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருந்தன. இவை அனைத்தையும் நான் வரவேற்கிறேன்' என்று பேசினார். 

ஆனால் தமிழிசைக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ஏழை எளிய மக்களுக்கு எந்த வகையிலும் பயன்பட முடியாத ஒரு உதவாக்கரை பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது. வளர்ச்சிக்கு செலவு செய்ய வேண்டியதை வாங்கிய கடனுக்கு வட்டியை கட்டுவதில்தான் ஆர்வம் செலுத்துகிறது என்பதை இந்த பட்ஜெட் காட்டுகிறது. 

குறிப்பாக தமிழ்நாடே இன்று போராட்டக்களமாக இருக்கிறது. அதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்கான அறிவிப்புகள் இல்லை. ஒருகோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் உள்ளனர். அவர்களுக்கு பலன் தரும் அறிவிப்புகள் ஏதும் இல்லை. சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் தமிழக அரசுக்கு இருக்கிறது. வருவாயை பெருக்குவதற்கான எந்தவொரு அறிவிப்பும் பட்ஜெட் இல்லை. ஏட்டுச் சுரைக்காயாக இந்த பட்ஜெட் உள்ளது' என்று அடுக்கடுக்காக விமர்சித்தார். 

ஸ்டாலினுக்கு பதில் சொன்ன ஜெயக்குமார், ‘இது ஏட்டுச் சுரைக்காய் பட்ஜெட் அல்ல. நாட்டுச் சுரைக்காய் பட்ஜெட். அனைவருக்கும் உதவக் கூடிய பட்ஜெட்' என்று கவுன்டர் கொடுத்தார். 

.